படகில் சீனர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரம்

திங்கள் ஜூன் 29, 2020

கடந்த ஜனவரி மாதம், 6 சீனர்களை இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக 2 ஆஸ்திரேலியர்கள் கைதாகியுள்ளனர். 

முன்னதாக, கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த 6 சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் என இந்தோனேசிய படகை விலைப்பேசி சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைய முயன்றிருக்கின்றனர். 

ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட சீனர்கள், ஆஸ்திரேலியாவின் மனிதர்களற்ற Ashmore தீவுப்பகுதி அருகே சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். 

அதே சமயம், அவ்வேளையில் ஆஸ்திரேலிய வட பிராந்தியத்தில்(North Territory) வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டதாக காவல்துறையினருக்கு 2 ஆஸ்திரேலியர்கள் அழைத்திருக்கின்றனர். அப்போது மீட்கப்பட்ட அவர்கள் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் 6 மாத கண்காணிப்பிற்குப் பின்னர், சர்வதேச ஆட்கடத்தல் கும்பல் அங்கமாக இந்த 2 ஆஸ்திரேலியர்கள் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனையடுத்து நியூகேஸ்டில் மற்றும் குயின்ஸ்லாந்த் நகரத்தில் இருந்த இந்த இருவரையும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு சீனர்களை கடத்தும் இவர்களின் முயற்சி வெற்றி அடைந்திருந்தால், 6 சீனர்களை கடனுக்கான கொத்தடிமைகளாக (Debt Bondage) இந்த 2 ஆஸ்திரேலியர்களும் பயன்படுத்தியிருப்பார்கள் என ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.