பத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா?:

வியாழன் மார்ச் 26, 2020

பத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், அதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கொரோனா நோய்க்கிருமி ஒரு பொருளின் மேற்பரப்பில், குறிப்பிட்ட மணி நேரம் உயிருடன் இருக்கும். எனவே நாம் தொடும் எந்த பொருளின் வாயிலாகவும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், பத்திரிகைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? என்று எழுந்துள்ள கேள்விக்கு, வர்த்தக பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.

“பத்திரிகை அச்சடித்து, கட்டுகளாக கட்டப்பட்டு மாறுபட்ட வெப்ப சூழ்நிலையில் வாகனத்தில் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே அதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு” என்று அந்த அமைப்பு கூறி இருக்கிறது.