பத்திரிகையாளர்கள் விடுவிப்பு!

செவ்வாய் மே 07, 2019

மியான்மர் ராணுவமும், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்டதாக 2 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் தற்போது மியான்மர் அரசு விடுவித்துள்ளது.

மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் கடந்த 2017ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்தனர்.  இதனால் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து செய்தி சேகரித்து வந்தன. 

இதற்கிடையே, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வா லோன், யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிகையாளர்களை யாங்கூன் போலீசார் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி  கைது செய்தனர். 
 

அவர்களுக்கு உதவியாக இருந்த காவலரும் கைது செய்யப்பட்டார் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 


இந்நிலையில், கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை  விடுதலை செய்ய வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்த கருத்தை இங்கிலாந்து, ஸ்வீடன், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன' என கூறினார். 

இது பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். எனவே தங்களது செய்தியாளர்களை மியான்மர் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் கோரியது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட   வா லோன், யாவ் சோய் ஊ ஆகியோரை மியான்மர் அரசு  இன்று விடுவித்துள்ளது.