பூ பறிக்கும் ரோபோ!

செவ்வாய் நவம்பர் 05, 2019

சில ஆண்டுகளில், விவசாயத்துறையில் ரோபோக்கள் சகஜமாகிவிடும். பிரிட்டனைச் சேர்ந்த எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தோட்டத்தில், பூச்செடிகளை பராமரிக்கும் திறன் கொண்ட ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

'ட்ரிம்பாட்' என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, தோட்டத்தின் வரைபடத்தை மனப்பாடம் செய்து, நான்கு சக்கரங்களுடன் வலம் வருகிறது. இதன் ஒற்றைக் கரம், பூக்களை சிதைக்காமல், பறிக்கவும், புதர்களை வெட்டி, வடிவமைக்கவும் வல்லது.

பூக்களை அடையாளம் காண, ட்ரிம்பாட் ரோபோவுக்கு கேமராக்கள் உதவுகின்றன. தோட்டத்தின் பராமரிப்பு பற்றிய விபரங்கள் இந்த ரோபோவுக்குள் இருக்கும் கணினியில் நிரல்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எதன் மீதும் மோதி அழிக்காமல் இருக்க, இந்த ரோபோவுக்குள் நிரல்கள் உண்டு.

ரோபோக்களுக்கு எதிர்காலத்தில் நல்ல கிராக்கி இருக்கும் என்பதால், பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ட்ரிம்பாட்டை உருவாக்குவதில் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

தவிர, பணப்பயிர்களான ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை வேகமாக பறிக்க, ஏற்கனவே ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன என்பதால், ட்ரிம்பாட் விற்பனை அமோகமாக இருக்கும் என, வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.