புகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு!

வியாழன் ஜூலை 18, 2019

115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு தற்போது பாவனையில் உள்ள புகையிரத பாதையினை முழுமையாக நீக்கும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 

செயற்திட்ட ஒப்பந்த நிறுவனமான ஐகோன் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் குறித்த நிர்மாணப்பணி ஒப்பந்தத்தில் அமைச்சர் கைச்சாத்திட்டார். 

வடக்கு புகையிரத சேவையில் மஹவ - ஓமந்தை இடையிலான புகையிரத பாதை 133 கிலோ மீற்றராகும். மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான புகையிரதப்பாதை 1904 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. 

அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரதப்பாதை 1905 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த புகையிரதப்பாதைகள் எதுவும் சிறிதளவேனும் புனரமைக்கப்படவில்லை. இதனால் ஓமந்தை வரையில் புகையிரத சேவைகள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலேயே பயணிக்கிறது. 

குறுகிய தூரத்தைக் கொண்ட இந்த பிரதேசத்தில் புகையிரத சேவை பயன்பாட்டுக்கு மாத்திரம் 3 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். இதனால் தான் இந்த நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. 

மஹவ - ஓமந்தை புகையிரத பாதை நிர்மாணப் பணிக்காக 91.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கடனுதவியின் ஊடாக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய புகையிரத பாதை நிர்மாணிப்புடன் மேலதிகமாக 12 புகையிரத நிலையங்களும் புகையிரத பாதை வடிகால் பகுதிகளும் திருத்தியமைக்கப்படும். புதிய தொழிநுட்பங்களை உள்ளடக்கி மதவாச்சி மற்றும் வவுனியா வரை கண்டி - யாழ்ப்பாணம் புகையிரத சேவைகள் தற்போது காணப்படுவதை காட்டிலும் நவீனப்படுத்தப்படும். 

புதிய புகையிரதப்பாதையில் ஒரு மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். மூன்று வருட காலத்திற்குள் இந்த செயற்திட்டம் முழுமைபடுத்தப்படும்.

 முதற்கட்ட நடவடிக்கையாக மஹவ - அநுராதபுரம் வரை புகையிரதபாதை நிர்மாணிக்கப்படும். இரண்டாவதாக அநுராதபுரம் - ஓமந்தை வரை புகையிரதபாதை நிர்மாணிக்கப்படும். இந்த நிர்மாணப்பணிகளின் போது மஹவ - அநுராதபுரம் வரை 6 மாத காலத்திற்கும் அநுராதபுரம் - ஓமந்தை வரை புகையிரத பாதை 6 மாத காலதத்திற்கும் மூடப்பட்டிருக்கும். 

இந்த சந்தர்ப்பத்தில் பயணிகள் மாற்று புகையிரத பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது அமைச்சர் குறிப்பிடுகையில், 

குறுகிய காலத்திற்குள் போக்குவரத்து அமைச்சுடன் தொடர்புபட்ட அனைத்து போக்குவரத்து மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புதிய போக்குவரத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது. முழுநாட்டையும் ஒருமுக்கப்படுத்தும் வகையில் போக்குவரத்து திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பெலியத்த தொடக்கம் கதிர்காமம் வரையான புகையிரதபாதை அமைத்தலுக்கான விலைமனுகோரல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.