புலிகள் பற்றி பேசுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அருகதையில்லை!

புதன் பெப்ரவரி 26, 2020

தமிழீழ விடுதலைப் புலிகள் சண்டையில் எதிரியைத் தோற் கடித்தால் பலமானவர்கள் என புகழ்வதும் சண்டையில் தோற்றுவிட்டால் அவர்களால் முடியாது என்ற தூற்றும் மனநிலையில் உள்ளவர்கள் இன்று தமது வங்ரோத்தான அரசியல் தேவைக்காக விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்பிரனர்களை தமிழ் மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளார்கள் என்பதை வெளிக்காட்ட இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது.

‘உரியவன் இல்லாவிட்டால் ஒருமுழம் கட்டை’ என்பது முதுமொழி. விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு பிரிவுகள் காணப்பட்டமை அனைவரும் அறிந்த உண்மை. அதன் ஒரு பிரிவாக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

2004ம் ஆண்டு இடம்பெற்ற சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலின் போது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் கீழ் மிகவும் சிறப்பாக அரசியல் நடவடிக்கை இடம்பெற்றது.

எனினும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றெடுப்பதற்காக ஆயுதமுனையில் போராடிய புலிகளை அழித்தொழிக்க ஏகாதிபத்திய நாடுகள் பேரினவாத சிங்கள சக்திகளுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டனர்.

ஆயுதமுனையில் பலவீனமடைந்தாலும், அரசியல் ரீதியாக தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட அரசியல் கட்சிகளும் கடைசியில் காலைவாரிவிட்டனர்.

இந்தியாவின் கைப்பொம்மைகளாக செயற்படும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகள், கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து விலகிச் சென்றன.

இந்தக் கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்கு நூறுவீதம் செயற்பட்டுள்ளார்கள் என்பது தற்போது புலனாகிறது. ஆனால், தமிழர்களின் ஆயுதம் தாங்கிய  விடுதலைப் போராட்டம் மெளனிக்கப்பட்டு பதினொரு வருடங்கள் கடந்துவிட்டன. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் சிறீலங்கா நாடாளுமன்ற தேர்தலின்போது மாத்திரம் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை யாராலும் பிரிக்க முடியாது உடைக்க முடியாது என சில அரசியல் கட்சிகள் கூக்குரல் போடுகின்றன.

தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆளுமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் இருக்கின்றன என்பது வெளிப்படையானது.

அதில், சந்தேகம் கொள்வதற்கு ஏதுமில்லை. ஆனால், அதன் சாத்தியப்பாடுகள் எப்படிப்பட்டது, தற்போதைய அரசியலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்கிற விடயங்களை கொஞ்சமாக ஆராய்ந்தால் ஓரளவு தெளிவான முடிவுக்கு வரலாம்.

இறுதி மோதல்களுக்குப் பின்னர் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட்டதுடன், அவர்களின் ஆளுமையை மெல்ல மெல்ல தமிழ் மக்களிடம் இருந்து நீக்கிவிடலாம் என்று அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் குறிப்பிட்டளவு நம்பியது.

அதற்கு, இராணுவ ரீதியிலான அணுகுமுறை - அடக்குமுறை சார்ந்தும் பெரும் முயற்சிகளையும் எடுத்தது. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை. மீண்டும் அந்தவகையான ஒரு தந்திரோபாயங்களை கையாள தென்னிலங்கை அரசாங்கம் முயற்சிக்கக் கூடும். 

காட்டிக் கொடுப்புக்கள், கொலை, கொள்ளை, தமிழ் பெண்களை சீரழித்தமை உள்ளிட்ட குற்றங்களை மேற்கொண்ட சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்புக்கு கூட்டமைப்புப் பற்றி பேசுவதற்கு ஒரு சதவீதம் கூட அருகதையில்லை.

ஆனால், இன்று பேரினவாத சக்திகளினதும் இந்தியாவின் கைபொம்மைகளாகவும் செயற்படும் இந்த அமைப்புக்கள், தங்களின் அரசியல் தேவைக்காக கூட்டமைப்பைப் பற்றி மக்கள் மத்தியில் பேசுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்பார்த்தும் தங்களின் ஆசனத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக
வும் முட்டிமோதுகின்றனர். இறுதி சண்டையின் போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வக்கில்லாத இந்த கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குக் கேட்க தயாராகின்றனர்.

அண்மையில் சிறீலங்காவின் அதிபர் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என வெளிப்படையாக கூறியபோது, இந்த கட்சிகளினால் வாய்திறக்க முடியவில்லை. இறுதி யுத்தத்தை நடத்தியவர் இனப்படுகொலையின் பிரதான சூத்திரதாரியான சிறீலங்கா அதிபர், தான் அதிபராகிய பின்னர் வெளிப்படையாக தான்செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இவருக்கு எதிராக சிறீலங்காவில் நீதிமன்ற விசாரணைகள் நடத்தமுடியாத உறுதியில்தான் இந்தகருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், சர்வதேசத்துடன் தொடர்பு கொண்டு சிறீலங்கா அதிபருக்கு எதிரான போரியல் குற்றச்சாட்டு மற்றும் இனப்படுகொலைக்கான நீதியை கோருவதற்கு இந்த அரசியல் கட்சிகளினால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்ல, இன்று முப்பது வருடத்திற்கு மேலாகவும் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் வாடுகிறார்கள். இவர்களை மீட்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்?

காணாமல் போன உறவுகளின் தாய் தந்தையர்கள் ஒருபக்கம் இறக்கின்றார்கள். மறுபக்கத்தில் அரசியல் கைதிகள் சிறையில் இறக்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாத அரசியல் கட்சிகள் வாக்கு பிச்சைகேட்க தயாராகின்றமை வேடிக்கையாது.

மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக பெரும் அர்ப்பணிப்புக்களை வழங்கி விடுதலைப் புலிகளினால் கட்டமைக்கப்பட்ட ஆளுமையை சில காலத்துக்குள் நீக்கிவிடலாம் என்பது அபத்தமானது.ஏனெனில், விடுதலைப் புலிகளின் காலத்துள், அவர்களின் வெற்றி, தோல்வி உள்ளிட்ட அனைத்தையும் உள்வாங்கிய மூன்று தலைமுறைகள் தான் இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தீர்மானிக்கும் தரப்பாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, இறுதி இரண்டு தலைமுறைகளே இனி வரும் 15 வருடங்களுக்கும் மேலான அரசியல் களத்தினை தீர்மானிக்கும் பெரும் சக்தியாக இருக்கப் போகின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில், புலிகளின் ஆளுமை நீக்கத்தினை செய்வது அவ்வளவு சாத்தியமானது அல்ல.
இறுதி யுத்தத்தின் போது இந்த அரசியல் கட்சிகளினால் சண்டையை நிறுத்தி அங்கு கொல்லப்படும் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றமுடியவில்லை.

இன்று நாங்கள் அது செய்துவிட்டோம், இது செய்துவிட்டோம் என ஓலம்விடுகின்றார்கள். இவர்களுக்கு ஊதுகுழலாக புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு சிலவும் செயற்படுகின்றன. தங்களுக்கு ஏற்ப அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டு நான் பெரிது நீ பெரிது என செயற்படுகின்றனர்.

தாயகப் பகுதியில் இயங்கும் அரசியல் கட்சிகள் தாங்கள் விரும்பிய பாதையில் செல்வதற்கு இந்தப் புலம்பெயர் அமைப்புக்களும் ஒரு காரணம். தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கி அவர்களுடன் அரசியல் பேரம் பேசுகின்றனர். இவ்வாறான சடுகுடு விளையாட்டுக்களை கைவிட்டு உண்மையான இதயசுத்தியுடன் செயற்படுவதனூடாக தமிழர்களின் கனவுகளை நிறைவேற்றக் கொள்ளலாம் என்பது திண்ணம்.

‘கிழக்கில் இருந்து’
எழுவான்

நன்றி: ஈழமுரசு