புளித்த ஏப்பம் எதனால்?

ஞாயிறு மார்ச் 15, 2020

உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க, பித்தம் மேல்முகமாக வரும் தன்மையும் அதிகரிக்கும். தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவையும் காணப்படும்.

உணவு குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தடுப்பானில் வரும் பிரச்சினையால் இப்படி ஏற்படுகிறது. உணவுக் குழாயின் கீழ் உள்ள வளையமானது மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கும் நிலையில் இப்படி நடக்கும். இந்த தடுப்பான் பித்தம் மேலே வருவதைத் தடுக்கிறது. வயிற்றின் மேல் பகுதியை இறுக மூடி வைக்கிறது. இது சரியாக மூடும்போது பித்த ஏப்பம் அல்லது மேல்முக பித்தம் வருவதில்லை.

சில நேரங்களில் இப்படி மூடாமல் போனால் பித்தம் மேலே வருகிறது. வாயில் பித்தம் ஊறுதல், கசப்பு, வயிறு எரிச்சல், எச்சில் ஊறுதல், வாந்தி எடுக்கும் உணர்வு, நெஞ்சு வலி, இருமல் போன்றவை காணப்படும். ஒரு சிலருக்கு உணவுக் குழாயில் புண்ணும், உணவுக் குழாய் சுருங்குதலும் காணப்படும். நிறைய குழந்தைகளுக்கு இந்த நோய் உள்ளது. கண்டுபிடிப்பதற்கு சற்று சிரமமானது.

உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க, பித்தம் மேல்முகமாக வரும் தன்மையும் அதிகரிக்கும். தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவையும் காணப்படும். குறட்டை நோயும் வரலாம். எடை ஒரு காரணம். 50 வயதுக்கு மேல் இது வருகிறது. சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இது காணப்படுகிறது. நெஞ்சு வலி, வயிறு எரிச்சல், விழுங்குவதற்குச் சிரமம் போன்றவை இதில் காணப்படலாம்.

இதற்கு வெந்தய பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தய கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்து கடைந்து சாப்பிடலாம். அஜீரண கோளாறுகளால் குடலில் உள்ள வாயுக்கள் சீற்றம் அடைந்து குடல் சுவரைப் புண்ணாக்கி விடுகின்றன. உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து குடிக்கலாம். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும்வரை எரிக்க வேண்டும். அந்த மஞ்சள் சாம்பலை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிடலாம்.

மது, புகை மற்றும் போதை தரும் பானங்களை கண்டிப்பாக தவிர்க்கவும். அதிக காரமான உணவு வகைகளையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடக் கூடாது. அதிக நார்ச்சத்து உள்ள உணவு வகை, முழு தானிய உணவுகளைத் தவிர்க்கவும். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகை, இறைச்சி, எண்ணெய் வறுவல் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

பூண்டு, இஞ்சி, காலிபிளவர், பூசணிக்காய், வெங்காயம் போன்றவற்றை கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய், நிலவேம்பு, மஞ்சள், பாதாம் பிசின், காவிக்கல், அம்மான் பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை, மாலை என இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு 21 நாள் இதைச் சாப்பிடலாம்.

காலையில் இறக்கிய பதநீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். சோற்றுக் கற்றாழையின் சோற்றுடன் புளிக்காத எருமைத் தயிரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் என சித்த வைத்திய குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.