புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசியல் தலைவர்கள்!

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

நாட்டில் யுத்தம் நிறைவடைந்தாலும், நாட்டைத் துண்டு துண்டாக்க புலம்பெயர்ந்து வாழும், தமிழர்கள் முயற்சிப்பதாக, தேசிய பிக்கு சம்மேளனத்தின் தலைவர் லியன்வல சாசரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்காக பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,புலம் பெயர்ந்து வாழும், தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சில அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்கப் போவதில்லை.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்தாலும், நாட்டை விழுங்குவதற்கு, தமிழ் டயஸ்போரா காத்திருக்கிறது. நாங்கள் புத்த பிக்குகள் என்ற வகையில், சகல சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவே வீதியில் இறங்கியுள்ளதனை, தமிழ் மற்றும் புலம்பெயர் தேசங்களிலுள்ள ஏனைய டயஸ்போராக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை சமஷ்டி முறையாக மாற்றி, ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் துண்டு துண்டாக்க விடமாட்டோம்.

இதற்கு எதிராக குரல் கொடுத்து சிறையில் இருக்கும் எங்கள் தலைவர் ஞானசார தேரரை சிறையிலிருந்து மீட்க, நாம் போராடுகிறோம். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்” என லியன்வல சாசரதன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.