பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல? மனிததன்மையற்ற நாகரிகத்துக்கு மாறிவரும் சீனர்கள்!

திங்கள் சனவரி 18, 2021

புதுபுது கண்டுபிடிப்புகளுக்கும், கொரோனா வைரஸ் பரப்பியதற்கும் பெயர் போன சீனா, தற்போது மனிதத்தன்மையற்ற மிகக் கொடூரமான ஒரு நாகரீகம் பரவிக் கொண்டிருக்கிறது. எந்தளவிற்கு கொடுமை என்றால் "Sea turtle" எனப்படும் உயிரோடிருக்கும் கடல் ஆமை குஞ்சுகளையும் மற்றும் சிறு வகை மீன்குஞ்சுகளையும் சிறிய வகை நெகிழிப்பைகளில் ஆக்ஸிஜனேற்றம் (Oxidation) செய்து சாவிக் கொத்துகளாக விற்கிறார்கள். 

இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என்று பாகுபாடில்லாமல், அனைத்து தரப்பினரும், அதை வாங்கிச் செல்வதுதான் காலக் கொடுமை.

மேலும் இயற்கை ஆர்வலர்கள் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தபொழுது, விற்பனை செய்யும் வியாபாரிகள் சொன்ன விளக்கம், ஆக்ஸிஜனேற்றத்துடன் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் தண்ணீரோடு அடைக்கப்படுவதால் அது தொடர்ந்து 3 மாதங்கள் வரை உயிரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்" என்ற ஓர் மனிதத் தன்மையற்ற விளக்கத்தை கொடுக்கிறார்கள். 

இதற்கு இடைப்பட்ட நாட்களில் வாடிக்கையாளர் விரும்பினால் இருக்கும் ஆமை குஞ்சுகளும் மீன் குஞ்சுகளும் உள்ள நெகிழிப் பையை உடைத்து வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்துக்கொள்ளலாமாம் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழியலாளர்கள் இதற்கு சட்டபூர்வமாக தடை கோரினாலும். சீனாவின் ஷாங்காய் போன்ற நகரங்களின் சுரங்கப்பாதைகளிலும், நடைமேடைகளிலும் ஒரு சாவிக்கொத்து 1.5 டாலருக்கு கள்ளச் சந்தையில் விற்கிறார்களாம். அதாவது, அங்கே விற்கப்படும் ஒரு "பர்கரை" விட மலிவானதாம்.

மேலும் இதுகுறித்து மருத்துவர் சாம் வால்டன் மலேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறுகையில், என்னதான் ஊட்டச் சத்துகளும், ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டாலும் அது வெளியிடப்படும் அம்மோனியம் போன்ற நச்சுகளால் ஓரிரு நாளில் இறந்துவிடும் வாய்ப்புகள் தான் அதிகம்.

அதோடு ஒரு நிலையான சீதோஷ்ண நிலையில் வாழும் கடல் வாழ் உயிரினங்களுக்கு, நாம் வாழும் இடத்திற்கான வெப்பநிலை மாற்றம் அதற்கு உகந்ததாக இருக்காது.

அதோடு இந்த சாவிக் கொத்து வாகனம் இயக்கத்தில் இருக்கும் பொழுது நிலையில்லாமல் மோதிக் கொண்டே இருக்கும் என்பதால் அவைகள் பட்டினியால் இறப்பதற்கு முன்பே அடிப்பட்டு இறக்கும் வாய்ப்புகளே அதிகம்" என்று விளக்குகிறார்.

இத்தனைக்கும் சீனாவில் 2009ம் ஆண்டு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகக் கடினமான சட்டமாக இயற்றப்படவில்லை என்பதே அங்குள்ள இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

"Sea turtles" எனப்படும் கடல் வாழ் உயிரினங்கள் எல்லை இல்லாத சுதந்திரத்துடன் அதற்குரிய தகவமைப்புடன் இயல்பாக வாழும் உயிரினம். தன்னை விட இரண்டே மடங்கு அளவுள்ள பாக்கெட்டுகளில் அடைத்து வைப்பது என்பது நம்மை ஒரு 7 x 4 அளவுள்ள இடத்தில் சிறைப்படுத்துவற்கு சமம்.

நாகரீகம் என்றப் பெயரில் மனிதன் போடும் ஆட்டத்திற்கு இயற்கை இன்னும் நிறையப் பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இப்பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.