புற்றுநோயாளிகளுக்கு உதவ தலைமுடி தானம்!

வியாழன் பெப்ரவரி 13, 2020

148 மாணவிகளும், 7 பேராசிரியைகளும் புற்றுநோயாளிகளுக்கு உதவ தலைமுடியைத் தானமாக வழங்கினர். இரண்டாம் ஆண்டாக முடி தான நிகழ்வை அவர்கள் நடத்தியுள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நலம் ஆரோக்கிய குழு சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி வழங்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடந்தது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

நலம் ஆரோக்கிய குழு, ஜாய் ஆப் கிவ்விங் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று முடி தானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குழுத் தலைவியான பேராசிரியை ரஜினி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

பேராசிரியை ரஜினி கூறுகையில், "மொத்தம் 148 மாணவிகள், 7 பேராசிரியைகள் தங்கள் முடியைத் தானமாக வழங்கினர். இரண்டாம் ஆண்டாக இந்நிகழ்வு நடந்துள்ளது. அனைவருக்கும் முடி தானம் பற்றித் தகவல் தெரிவித்தோம். கல்லூரியில் மொத்தம் இரண்டு ஷிப்ட் இருந்தது. நாள் முழுக்க வரிசையில் நின்று மாணவிகள் தாமாக முன்வந்து முடியைத் தானமாக அளித்தனர்" என்று குறிப்பிட்டார்.

முடி தானம் வழங்கிய மாணவிகள் தரப்பில் கூறுகையில், "தலைமுடியை வளர்க்கவே எங்களுக்கு விருப்பம் அதிகம். வாட்ஸ் அப் மூலம் முடி தானம் பற்றிக் கல்லூரியில் தெரிவித்தனர். புற்றுநோய்க்கு கீமோ தெரபி சிகிச்சை தரும்போது தலையில் முடி கொட்டும் என்பதற்காக முன்கூட்டியே மொட்டை அடிப்பதை அறிந்தோம்.

மொட்டை காரணமாக சிகிச்சை பெறுவோர் வெளியே செல்லவே தவிர்ப்பதாகவும் தெரிந்துகொண்டோம். விக் வாங்க அனைவராலும் முடியாது என்பதால் தானமாக முடியைப் பெறுவது அறிந்து முடி தானம் தந்துள்ளோம். நோயால் பாதிக்கப்பட்டவரின் வருத்தத்தைச் சிறிது போக்க எங்களின் முடி உதவுகிறது என்பதால் தானம் தருவதில் தயக்கத்தைத் தவிர்த்தோம். முடி தானத்துக்கு பிறகு நிச்சயம் வளரத்தானே போகிறது" என்று குறிப்பிட்டனர்.