புரட்சியாளர் சே குவேரா நினைவு நாள்!

புதன் அக்டோபர் 09, 2019

உலக இடதுசாரி சிந்தனையாளர்களாலும், இளைஞர்களாலும் கொண்டாடப்படும் புரட்சியாளர் சே குவேரா நினைவுநாள் இன்று. சே குவேரா 1928ம் ஆண்டு ஜூன் 14ம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார்.

இவரது குடும்பம் இடதுசாரி சார்பானதாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்கு கிடைத்தது. இவரது தந்தை சோசலிச ஆதரவாளராக இருந்தார்.

இதனால் இவருக்கும் சோசலிசம் மீது பற்று ஏற்பட்டது. வாழ்க்கை முழுவதும் ஆஸ்துமா நோய் இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.  

சே குவேராவின் வீட்டில் 3,000 நூல்களுக்கு மேல் இருந்தன. காரல் மார்க்ஸ், லெனின், நேரு போன்றோரது நூல்களை விரும்பி வாசித்தார்.

1948ம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951ல் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன், மோட்டார் சைக்கிளில் தென்அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார்.

இப்பயணத்தின் போது அவருக்கு கிடைத்த அனுபவங்களை “மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்” என்னும் தலைப்பில் நூலாக எழுதினார். இந்த பயணத்தின் முடிவில் ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்ற தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பினார்.

அர்ஜெண்டினாவுக்கு திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ பட்டம் பெற்றார்.

1953ல் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்கிய சேகுவேரா குவாதமாலாவுக்கு சென்றார். அங்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது.

இவர் பெரு நாட்டை சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரி சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் மூலமே பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட கியூப புரட்சியாளர்களின் தொடர்பு சே குவேராவிற்கு கிடைத்தது.

இக்காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட அர்ஜெண்டின சொல்லாகும்.

பிடல் காஸ்ட்ரோவுடனான நட்பை தொடர்ந்து, சே குவேரா அவரது போராட்ட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். டாக்டராக பணியாற்ற வேண்டிய இவர், ஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடினார்.

இந்த இயக்கம் 1959ல் அமெரிக்காவை விரட்டியடித்து கியூபாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கியூபாவின் மத்திய வங்கி தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் பொலிவியா போன்ற நாடுகளை அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக, 1965ம் ஆண்டில் தனது பதவிகளை எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு, கியூபாவில் இருந்து ரகசியமாக வெளியேறினார்.

இதை மோப்பம்பிடித்த அமெரிக்காவின் சிஐஏ உளவாளிகள் பொலிவியாவில் வைத்து சே குவேராவை கைது செய்தனர். ஏற்கனவே கியூபாவில் தங்களை அடித்து ஓடவிட்டதால் சே குவேரா மீது கோபத்தில் இருந்த அமெரிக்கா, அவரை அங்கேயே சுட்டுக்கொல்ல தீர்மானித்தது.

பள்ளி ஒன்றில் வைத்து 1967 அக்.9ம் தேதி சே குவேரா சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் நினைத்திருந்தால் டாக்டர் பட்டத்தை வைத்து, கை நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு அடிமைப்பட்ட மக்களுக்காக தன் கைகளில் துப்பாக்கியை ஏந்தி போராடியதாலேயே இன்றுவரை நமது நெஞ்சத்தில் வாழ்கிறார் சே குவேரா.