புரட்சியின் மறு வடிவம்!

வெள்ளி ஜூன் 28, 2019

உலகம் முழுவதும் புரட்சியின் நாயகன் சே குவேராவின் 91வது பிறந்ததினம் எழுச்சிகரமாக நினைவு கொள்ளப்பட்டு வருகின்றது. புராட்சிக்கு ஒரு வடிவம் இருந்தால் அந்த வடிவம் தான் சேகுவேரா.‘சே’ என அனைவராலும் அழைக்கப்படும் சேகுவேரா 1928ம் ஆண்டு யூன் மாதம் 14ம் திகதி ஆர்ஜெண்டீனாவில் ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவர்.

ஏகாதிபத்தியத்தை அழித்தொழிக்காமல் படுகொலைகளையும் பட்டினி சாவுகளையும் தடுத்திர முடியாது என தனது புரட்சிகர பயணத்தை ஆரம்பித்தவர் தான் ‘சே’.மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த புகழ் பெற்ற கொம்யூனிஸ்ட் புரட்சியாளர் இவர்.

1955ல் மெக்சிகோவில் சே குவேரா முதற்தடவையாக பிடல் கஸ்ரோவை சந்தித்தார். கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை அமெரிக்கா உறிஞ்சிக் கொண்டிருந்த காலப்பகுதியில் பிடலுடன் யூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்று கியூபாவின் சரித்தித்தை மாற்றியமைத்தவர்.

புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்..

1959 முதல் 1961 வரை கியூபா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றினார் சே குவேரா.அதே காலகட்டத்தில் கியூபாவின் நிதி மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

கியூப அரசின் பிரதிநிதியாக, இந்தியா, சோவியத் ஒன்றியம் உள்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார் சேகுவேரா.1964 டிசம்பரில் சே குவேரா தலைமையிலான கியூப பிரதிநிதிகள் குழு ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றது.அப்போது ஐ.நாவில் உரையாற்றிய சே தென்னாப்பிரிக்காவில் நிலவிய வெள்ளை நிறவெறி மற்றும் அமெரிக்கா கறுப்பர் இன மக்களை நடத்திய விதம் ஆகியவற்றை விமர்சித்தார்.

அதே ஆண்டு இறுதியில் தனது மூன்று மாத சர்வதேச சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய சே குவேரா சீனா, வடகொரியா, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் சில ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கியூபா அரசின் வெளியுறவுத் தொடர்பை பலப்படுத்தினார்.

1965 பிப்ரவரி 24 அன்று அல்ஜீரிய தலைநகரில் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஒற்றுமை குறித்து நிகழ்த்திய உரையே சே குவேரா கடைசியாக பொது வெளியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக அறியப்படுகிறது.

அதன்பின் சில வாரங்களில் மாயமான சே குவேரா குறித்து சில மாதங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை.

111

அதே ஆண்டு அக்டோபர் 3ம் திகதி, சே குவேரா கியூபா மக்களுக்கு எழுதிய ‘பிரியாவிடைக் கடிதத்தை’ பிடல் கஸ்ரோ வெளியிட்டார். கியூபப் புரட்சிக்கான தனது ஆதரவை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த சே, தனக்கு வழங்கப்பட்ட கியூபக் குடியுரிமை மற்றும் பதவிகள் அனைத்தையும் துறப்பதாகக் கூறியிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கொங்கோவின் முன்னாள் பிரதமர் பாட்ரைஸ் லுமும்பாவின் ஆதரவாளர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சிக்கு ஆதரவாகப் போரிட தனது கொரில்லா படையினர் 12 பேருடன் கொங்கோ சென்றிருந்தார் சே. முன்னாள் இராணுவத்தினர் கொங்கோ கிளர்ச்சியாளர்களின் செயல் திறனின்மையால் ஏற்கனவே கவலையுற்றிருந்த சே குவேராவின் இருப்பிடம் மற்றும் நடவடிக்கை ஆகியவற்றை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்தது உள்ளிட்ட காரணங்களால் புரட்சியை செயல்படுத்த முடியவில்லை என்று சே நினைத்தார்.

அதன்பின் உண்டான உடல்நலக் குறைவைத் தொடர்ந்து தான்சானியா மற்றும் செக் குடியரசில் தங்கியிருந்த சே,ஒரு போலி கடவுசீட்டைப் பயன்படுத்தி பொலிவியா சென்றார்.

1967 ஒக்டோபர் 7ம் திகதி அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா ஒக்டோபர் 9ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை. பின்னர் 1995ல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானத்தளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப்பட்டு ஒக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த பின்பும் இலட்சக்கனக்கானவர்களின் மனங்களில் இன்றும் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் ‘சே’.

நன்றி: ஈழமுரசு