புதிய பெயரில் வெளியாகும் ‘முகநூல்’

புதன் அக்டோபர் 20, 2021

‘முகநூல்’நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு, அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் முதன்மையாக விளங்கும்‘முகநூல் நிறுவனம், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் போன்ற துணை நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.அண்மைய காலங்களில் முகநூல் செயலிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்கா கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகநூல் நிறுவனம் புதிய பெயரில்,ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு செயலியில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்,ஓகலஸ் உள்ளிட்ட பிற செயலிகளைப் பெற வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள முகநூலின் வருடாந்த மாநாட்டில் மார்க் ஸக்கர்பர்க் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அதற்கு முன்னரே அடுத்த வாரத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி,முகநூலின் புதிய பெயர் வெளியாகலாம் எனவும் முகநூல் நிறுவன தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

ஆனால், ஊகங்களுக்குப் பதிலளிக்க முடியாது என முகநூல் மறுத்துள்ளது.மேலும் பெயரை மாற்றுவதால் அது முகநூலிற்கு பிரச்சினையைத்தான் ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.