புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம்! வழக்குகள் இரத்து-

செவ்வாய் ஜூன் 28, 2022

சென்னை- புதிய வேளாண் சட்டங்களுக்க எதிராக போராடியதற்கு எதிராக சிபிஎம், விசிக உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்ட வழங்குகளை உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்தது. இந்த சட்டத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களே பயன்பெறுவார்கள் என விவசாயிகள் குற்றம் சாட்டினார்.

இந்த சட்டத்தை, விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். கொரோனா தொற்று இடையேயும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. டெல்லியில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வந்தன.

இதனையடுத்து தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்நிலையில் இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனையடுத்து டெல்லியில் முகாமிட்டிருந்த விவசாயிகள், ஆதரவாளர்கள் தங்களது போராட்டங்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், 2019ல் சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் இரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.