புட்டும், போராட்டமும்

புதன் நவம்பர் 25, 2020

புட்டு இன்று திடீர்ப் பேசு பொருளாகியிருக்கிறது. எம்மை உசுப்பி விட, எம் ஞாபகங்களைக் கிளறி விட, எம் வேர்களை நாமே தூர் வாரிக் கொள்ள, எப்போதும் எமக்கு அயலானொருவன் தேவைப்படுகிறான். ஒரு எதிர்ப்பரசியல் தேவைப்படுகிறது. ஒரு சீண்டற் பொறி வேண்டியிருக்கிறது.

புட்டின் வேர், புட்டின் ஆதிமூலம் எவையென்பன சரியாகத் தெரியா விடினும், அல்லது அவை நமது தனித்துவம் இல்லையெனினும் கூட, புட்டு நம் பண்பாட்டு உணவு. புட்டு நம் புராதன உணவு. புட்டை, அவித்து அவித்துச் சலிக்காமல் கொட்டிய கைகள் எங்கள் அம்மாக்களுடையவை. எட்டுச் செலவுக்கும், பூப்புனித நீராட்டு விழாவுக்கும் கூட புட்டின் பங்கு இருக்கிறது. புட்டின் பிரியர்களாக, புட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு வளர்ந்த குழந்தைகள் நாங்கள். இன்றும் புட்டுப் பானை ஏறாத வீடுகள் இல்லையென்றபடியாய், புட்டு நம்மோடும்...நம் வரலாற்றோடும்...நம் பண்பாட்டோடும்..கலாசாரத்தோடும் என தொடர்ச்சியாக எங்களோடு பயணித்து வருகிறது. இன்னுமின்னும் நிரம்பக் காலங்கள் புட்டு, எம் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் என்பதில் எந்த அவநம்பிக்கைகளும் இல்லை.

புட்டும் போராட்டமும், புட்டும் போராளிகளும், புட்டும் மாவீரர்களும், புட்டும் அகதி வாழ்வும்...புட்டும் போர்க்களமும், புட்டும் காடுகளும்...என நமது அடையாளமாக இருக்கின்ற புட்டின் எழுதப்படாத பக்கங்களின் கதைகள் ஏராளம் ஏராளம். ஆம். நமது விடுதலைப் போராட்டத்திற்கு அன்னலட்சுமியாக கை கொடுத்ததும் புட்டுத் தான். போராளிகளின் பசி தீர்ந்த தேவாமிர்தம் புட்டாக தான் இருந்தது. இன்னும் சொன்னால், புட்டும், சோறும் தான் அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. அவை தான் அவர்களின் உணவும், சிற்றுண்டியும் கூட. புட்டும் இறைச்சியும், புட்டும் பருப்பும், புட்டும் சோயா மீற் கறியும், புட்டும் சொதியும் தான் அவர்களின் பெரும்பாலான இரவுணவாக, காலையுணவாக இருந்தன.

ஆயிரக்கணக்கான போராளிகளின் பாசறைகளுக்கெல்லாம் இடியப்பம் பிழிவதென்பது சாத்தியமேயில்லாத விடயம். அது அருமருந்தன்னதாக, ஆங்காங்கே காயப்பட்ட போராளிகளுக்கான மருந்துவமனைகளில் கொடுக்கப்பட்டது. புட்டு தான், போராட்டத்துக்கும் போராளிகளுக்கும் எப்போதும் வசதியாக இருந்தது. புட்டுத் தான் கடின பயிற்சிகளின் காட்டுப் பசிகளை, ஓரளவாவது தணிக்கக் கூடியதுமாக இருந்திருக்கிறது. காடுகளுக்குள் நீண்ட, நெடிய பட்ட மரங்களை இழுத்து வந்து, திறந்த அடுப்பில், அரை மண்ணெய் பரலில் தண்ணீர் விட்டு, கொதிக்கப் பண்ணி, மேலே , சாக்கை வெட்டிக் கட்டி, அதன் மேல் மாவைக் கொட்டிப் போராளிகள் புட்டவிக்கும் அழகு முறையே தனி.

அப்படி அவித்தால் தான், அவர்களால் ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு , ஆகக் குறைந்தது காலை பத்து மணிக்காவது காலையுணவைக் கொடுக்க கூடியதாக இருந்தது. போராளிகளின் சமையற்கூடம் என்பது ஒரு திருவிழாக் காலக் கடை போன்றது. எப்போதும் கலகலப்பாக இருக்கிற இடமது. போராட்டத்துக்கென வந்த விடுகிற இளைஞர்-யுவதிகளின் முதற் பணியிடம் சமையற்கூடம் தான். விலகும் போதும் கூட இறுதிப் பணியிடமும் அங்கு தான். பல போராளிகள் சமையல் விற்பன்னர்களாகிக் கொண்டதும் அங்கு தான். ஒரு போராளியை தாயுமானவனாக்கிக் கொண்டதும் அவர்களின் சமையற்கூடங்கள் தான்.

கட்டிப் புட்டு, கல்லுப் புட்டு, கொங்கிறீற் புட்டு, மாப் புட்டு, களிப் புட்டு என்று அவித்துப் பிழைத்த புட்டுக்களின் பெயர்களும் அதிகமதிகம் தான். புட்டில் தான் எல்லாப் போராளிகளும் சமையலைப் பழகினார்கள். பிழைத்ததையே தான், வருந்தி வருந்தி உண்ண வேண்டிய சந்தர்ப்பங்களும், சிக்கனக் கட்டுப்பாடுகளும் அமைந்தன. சாக்கில் அவிக்கும் புட்டுக்கு ஒரு வாசம் இருந்தது. திறந்த பெரிய அகன்ற அடுப்புக்களில் பெரிய கிடாரங்களிலும் கூட புட்டு அவிக்கப்பட்டது.

புட்டும் அம்மாவும்

------------------------

முல்லைத்தீவு இராணுவ முகாமின் வீழ்ச்சிக்குப் பின்னர், அங்கு எடுக்கப்பட்ட உணவுக் களஞ்சியப் பொருட்களைக் கொண்டு, தனது அபாரமான நிர்வாகத் திறமையால், விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளராக இருந்த லெப்ரிணன்ட் கேணல் அம்மா அல்லது அன்பு என்று அழைக்கப்பட்ட மாவீரன் மிக நேர்த்தியாக போராளிகளுக்கு உணவை வழங்கினார். முல்லைத் தீவு முகாமின் வீழ்ச்சி என்பது, போராளிகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லாத வாழ்வின் வெற்றியும் தான். அந் நாட்களில், புட்டும் சமன்ரின் கறியும், புட்டும் பருப்பும், புட்டும் சோயாமீற் குழம்பும் என ஆண்டுக் கணக்காக, போராளிகளின் பாசறையில் இரவுணவாக மாறி மாறி புட்டே ஆட்சி செய்து கொண்டிருந்தது.

பாற்புட்டு, குழற்புட்டு, சுறாப்புட்டு என்றெல்லாம் வகைவகையாக வாய்க்கு ருசியாக புட்டை சாப்பிடக் கொடுத்து வைக்காத போராளிகளையும், போராட்ட வாழ்வையும், ஏதோ ஒரு வகையில் புட்டு திருப்திப்படுத்தி வளர்த்தெடுத்தது. பெரிய பெரிய நீல லொக்ரியூப்களில் புட்டையும், சிவப்பு,நீல பிளாஸ்ரிக் வாளிகளில் கறிகளையும் எடுத்துச் செல்லும் போராளிகளை அந் நாட்களில் அடிக்கடி தெருக்களில் காணக்கூடியதாக இருந்தது. அந்த யுத்த நாட்களில், இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சு விமானங்கள், புலிகளின் மருத்துவமனைகளையும், சமையற்கூடங்களையும் கூட வேவு பார்த்து திட்டமிட்டு குண்டுகள் போட்டு அழித்தன. பெரும்பாலான தருணங்களில் சனங்களின், அயல் வீடுகளே பாதிக்கப்பட்டாலும், சமையற்கூடங்களில், புட்டு அவித்துக் கொண்டிருந்த கொட்டில்களுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்த வரலாறுகள் நடந்திருக்கின்றன. போராளிகளும், பணியாளர்களும் சாவடைந்திருக்கிறார்கள்.

ஒரு போராட்டத்தின் வெற்றிக்கு ஆதாரம், முன்னணிக் களச்சூட்டாளர்கள் மட்டுமல்ல. பின்னணி வழங்கற் காரர்களும் தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பது போல, அந்தப் போராளிகளின் உடற்சக்தியை பெரும்பாலும் புட்டே சமாளித்தது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்றெல்லோரும் எழுதிப் பகிர்ந்து கொள்வதைப் போல, போராளிகளுக்கு சுவையானபுட்டுக்கள் சுடச்சுடக் கிடைக்கவில்லை. நாவூறுகிற விதம் விதமான புட்டின் அற்புத படங்களைப் போல அவர்களுக்கு, ஒரு போதும் கிடைத்ததுமில்லைத் தான். போராட்டத்தின் கடின பாதைகள் வழியே, புட்டையும் கணவாய்ப் பிரட்டலையும், புட்டையும் பலாப்பழத்தையும், புட்டையும் கத்தரிக்காய்ப் பொரியலையும் எதிர்பார்ப்பது நீதியாக இருக்காது தான். எல்லாம் தெரிந்தே தம் தியாக வாழ்வைத் தொடங்கிய போராளிகள் அப்படி எதிர்பார்த்ததுமில்லை. அவர்கள் கிடைத்ததே அமுதம் என்று உண்டு மகிழ்ந்தவர்கள்.

வெளியே தெரியாத சிலுவைகளால் நிறைந்தது அவர்களின் பயணங்கள். வாழ வேண்டிய, சாப்பிட வேண்டிய வயதில் அவர்கள் யாவற்றையும் நாட்டுக்காக இழந்தார்கள். “தாயொடு அறுசுவை போயிற்று” அவர்களுக்கு. புட்டை ஒரு ஆதார உணவாக, தம்மை இயக்கப் போதுமான சக்தியாக மட்டுமே அவர்கள் உண்டு கழித்தார்கள். பெரிய துறவறம் அது. நம்மால் நினைத்துப் பார்த்துப் பார்த்து எட்ட முடியாத வாழ்வின் நெடுந்தூரம் அது. மாவீரர்கள் மட்டுமல்ல. போராளிகளாய் இருந்தவர்களும் தலை வணக்கப்பட வேண்டியவர்கள் தான். ஒரு காலத்தின் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட, நாட்டின் பெயரால் தமக்குள் புதைத்துக் கொண்டவர்கள் அவர்கள். களத்தில் விழுந்த ஒவ்வொரு போராளியின் குருதியிலும், புட்டு நிறைந்திருந்தது. ஒவ்வொரு விழுப்புண்களையும், புட்டு தான் ஆற்றித் தேற்றி எடுத்தது. புட்டு நமக்கெல்லாம் ஒரு உணவு. போராளிகளுக்கும், போராட்டத்திற்கும் புட்டு என்பது பசியாக இருந்தது. புட்டு என்பது உயிராக இருந்தது. இதெல்லாம் மிகையில்லை என்பதை, வாழ்ந்து அனுபவித்தவர்கள் அறிவார்கள்.

புட்டும் மணலாறும்

--------------------------

மணலாற்றுக் காடுகளின் முன்னணிக் காவலரண்களுக்கு புட்டும், இறைச்சிக் கறியும், சொதியும் சுடச்சுட சென்றடைவதில்லை. அவை அந்த இடங்களுக்கு பழுதாகாமல் போய்ச் சேருவதே பென்னம் பெரிய விடயங்களாக இருந்தன. சொப்பிங் பாக்குகள் தான் புட்டையும், கறியையும், சொதியையும் கூடக் காவிச் செல்லும் கொள்கலன்களாக இருந்தன. நூறு சாப்பாடு, ஐந்நூறு சாப்பாடு, முன்னூற்றைம்பது சாப்பாடு என்று தலைகளுக்கு ஒரு பைக்கற் என எண்ணிப் பிரிக்கப்பட்டு, உழவு இயங்திரங்களில் ஏற்றப்பட்டு, சாரதி ஒருவரும், அவருக்கருகில் துப்பாக்கியோடு ஒரு போராளியுமாக உணவுகள், தெருவழியாக போய்க் கொண்டிருந்ததை அன்றைய சனங்கள் கண்டனர்.

ஆண்டான் குளம், குமுமுனை என பல மைல்கள் தூரத்தே இருந்த கிராமங்களிலிருந்து, மணலாற்றின் முன்னணிக் காவலரண்களுக்கு வெளிக்கிளம்புகிற இந்த உணவுச் சங்கிலித் தொடர்கள், இறுதியிடத்தைப் போய்ச் சேரும் என்ற எந்த நம்பிக்கைகளும் இறுதி வரை இருப்பதேயில்லை. புட்டுப் பைகளையும், கறி,சொதிகளையும் காவிச் சென்ற உழவு இயந்திரங்கள் குண்டு வீச்சுக்கு இரையாகின. இராணுவத்தினர் காட்டுக் கரைகளில் பதுங்கியிருந்து, உணவு வாகனங்களை திட்டமிட்டுத் தாக்கினர். பசித்துக் கிடந்த வயிறுகளைப் போய்ச் சேராமலே, புட்டும் கறியும், நடுத்தெருவில் பழுதாகிக் கொட்டுப்பட்டன. போராளிகள், இரண்டு நாட்களுக்கும் மேலாக உணவு விநியோகம் கிடைக்காமல் பட்டினி கிடக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். உணவைக் காட்டிலும், தண்ணீர் மணலாற்றுக் காடுகளில் பெரும் பிரச்சனையாக இருந்தது.

குடிக்க ஒரு குவளை தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற நிலையில் போராளிகள் தாகத்தோடு இருந்தனர். வெயில் காலங்களில் மணலாற்று நிலம் பொறி பறந்தது. தண்ணீரை மருந்தினும் அரியதாக பாவிக்க வேண்டி இருந்தது. காடுகளின் குறிப்பிட்ட இடத்துக்கு, புட்டுப் பார்சல்கள் சென்றடைந்த பின்னர், போராளிகள் தவணை முறையில் சிறுசிறு குழுக்களாக தத்தம் உணவுகளை முன்னணிக் காவலரணிலுள்ள சக போராளிகளுக்கு காவிச் சென்றனர். ”கம்படித்தல்” அல்லது ”கம்பால் அடித்தல்” என்ற மணலாற்றுப் போராளிகளுக்கேயான புதிய சொல்மொழி ஒன்று உண்டு. ஒரு ஆறு அல்லது எட்டடி நீளமான காட்டுத் தடியில், உணவையும், தண்ணீரையும் கொழுவி, தத்தம் தோள்களில், ஆண் போராளிகளும், பெண் போராளிகளுமாக எந்தப் பால் பாகுபாடுமற்று உணவுகளைக் காவினர்.

கம்பளங்கள் விரித்த தரையில்லைக் காட்டுப் பாதைகள், அது பெருவிரல்களை ஆவென்று பிளந்து, இரத்தக் காயமாக்கி வைக்கும், அடிக்கட்டைகளால் ஆன பாதைகள். கறையான் புற்றுக்கள், அருவிகள், மேடுகள், பள்ளங்கள் என கம்பில் கொழுவிய உணவையும், தண்ணீர்க் கான்களையும் காவிச் செல்ல வேண்டும். இடையில் ஆமி படுத்துக் கிடப்பான். வெளுப்பான். காயப்பட்டார்கள். வீரமரணம் அடைந்தார்கள். புட்டுப் பார்சல்கள் குருதியால் நனைந்தன. சாப்பாடு எடுத்து வரப் போனவனையும், சாப்பாட்டையும் வித்துடலாய்க் கொண்டு வந்து கிடத்தி விட்டு, சாப்பிட முடியாமற் தவித்த சம்பவங்களும் நடந்ததுண்டு.

ஆம். போராட்டத்தின் வெளித்தெரியாத வலிகள் ஆழம் மிக்கது. கம்படிக்கிற போது, தடி உரசியுரசி, தோள்ப்பட்டைகளில் இரத்தம் கசியும். புண் காய்க்கும். மாற்றி மாற்றி, தோள் காவி, இரண்டு பக்கமும் செம்புண்களால் கசியும். எரியும். வலிக்கும். நீர் வடியும். மீளவும் அடுத்த நாள், அதே புண் மீது, அதே பாரத்தைச் சுமந்து, அதே பாதை வழியே ஆயுதத்தையும் கொழுவிக் கொண்டு வர வேண்டும். காதை கூர்மையாக்கி நடக்க வேண்டும். கண்ணை கழுகு போல காட்டின் பக்கமெங்கும் சுற்ற வேண்டும். சத்தம் போடக் கூடாது. கால்கள் உளையும். பிடித்து விடச் சொல்லிக் கெஞ்சும். கொஞ்சம் இருந்து விட்டுப் போகலாமா என்று இதயம் கேட்கும். பசி வயிற்றைப் பிடுங்கித் தின்னும். அங்கே தோழர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எந்த மணம் குணமுமில்லாமல், புட்டுப் பைகள் மீதும், கறிப் பைகள் மீதும், ஆவி பூத்துக் கிடக்கும்.

காலை ஆறு மணிக்கு கொட்டிய புட்டு, பத்தரை தாண்டிக் கைவைக்கும் போது, தேங்காய்ப்பூ புளித்து மணக்கக் கூடும். எறியவா முடியும்? தேவாமிர்தமல்லவா? பெரும்பாலும், பேய்ப்பசிக்கு மிச்சம் வராது. அப்படி மிஞ்சினாலும், அதை சேமித்து வைக்க வேண்டும். ஏனெனில், அடுத்த நாளுக்கு உணவு கிடைக்காமற் போக ஏராளம் காரண காரியங்கள் இருக்கும். மிஞ்சின சொட்டுப் புட்டையும் போராளிகள் கொட்டி விடுவதில்லை. வறுமையின் போது தான், மனிதன் புதிது புதிதாய் உத்திகளைக் கண்டடைகிறான் போலும். மணலாற்றுக் காட்டுக்குள் எல்லாம் அத்தனை இலகுவாய் வானம் தெரிந்து விடாது. சிறிய குமிழியைப் போல, தொட்டம் தொட்டமாய் ஆங்காங்கே ஒளி நிலத்தில் விழும். மிஞ்சிய புட்டை ஒரு தாளில் வைத்து, போராளிகள் காய விடுவார்கள். அதிலிருக்கும் தேங்காய்ப் பூக்களை காட்டெறும்புகள் காவிச் செல்லும். மிஞ்சிய புட்டு, இறுகிக் காய்ந்து மீண்டும் குறுணிக் குறுணி மாவுருண்டைகளாகும். காலைகளின் பசி தீர்க்கும், சிற்றுண்டியாக அது மாறும். மணலாற்றுக் காட்டின் முட்டைமாச் சிற்றுண்டி அது தான். உலுவிந்தம் பழப் பாணியும், வெறும் தேனீருமாய், சில காலைகள் வயிறு நிறைக்கையில், இந்த புட்டுக் குறுணிகள் விசேட சிற்றுண்டியாகி விடும். அத்தனை ஆனந்தத்தோடு, அந்தச் சிற்றுண்டிக் கண்டு பிடிப்பை போராளிகள் உண்டு முடிப்பார்கள்.

இப்படித் தான், புட்டுக்கு வெளித் தெரியாத போராட்டத்தின் வரலாறுகள் இன்னுமின்னும் மிச்சம் இருக்கிறது. புட்டு போராளிகளை வளர்த்தெடுத்தது. புட்டு மாவீரர்களுக்கு பசி தீர்த்தது. புட்டை ஒரு காலமும் நாங்கள் மறந்து விட முடியாது. புட்டைக் கொண்டாடுவோம். புட்டை மதிப்போம். புட்டை எம் பெருமை மிகு அடையாளமாகச் சொல்வோம். புட்டின் வழியாகவும், எங்கள் போராளிகளை, மாவீரர்களை, போராட்டத்தை ஞாபகங்களில் கடத்திச் செல்வோம்.

---- முற்றும் -----

(படைப்பாக்கம் - உலுவிந்தம்பழம்)

24 புரட்டாதி 2020