புதுவிதமான துணி துவைக்கும் இயந்திரம்!

புதன் சனவரி 29, 2020

அண்மையில்,புதுவிதமான துணி துவைக்கும் இயந்திரத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியிருக்கிறது. துவைத்தல் என்பதைவிட, சுத்தம் செய்தல் என்பது தான் சரி.

சாம்சங்கின்,'ஏர் டிரெஸ்சர்' என்ற பெட்டி போன்ற கருவியில்,சுத்தம் செய்ய வேண்டிய உடைகள் சிலவற்றை மாட்டி வைத்துவிட்டால், குழாய்கள் மூலம் அதிவேகமான காற்று துணிகளின் மேல் பாய்ந்து மேலோட்டமாக இருக்கும் துாசி,அழுக்கு போன்றவற்றை நீக்கிவிடுகிறது.

பிறகு நீராவி அடித்து ஆழமாக படிந்துள்ள அழுக்குகளை போக்குகிறது.அடுத்து, வியர்வை வாடை, சிகரெட் நாற்றம்,உணவு வாடை போன்றவற்றை போக்கி, மெல்லிய நறுமணம் ஒரு குழாய் மூலம் பாய்ச்சப்படுகிறது; அவ்வளவுதான்.

துணி அடித்துத் துவைத்து, கசக்கிப் பிழியாமல் அணியத் தயாராகிவிடும்.ஏர் டிரெஸ்சர் கருவி துணிகளை மென்மையாக கையாள்வதால், உடைகளின் ஆயுள் அதிகமாக இருக்கும் என்கிறது.
சாம்சங்.

காரில் போய்,'ஏசி'யில் அமர்ந்து வேலை பார்க்கும் வெள்ளைக் காலர் பணியாளர்கள் வீட்டை, ஏர் டிரெஸ்சர் குறிவைத்திருக்கிறது என்பது நிச்சயம்.