'புவிசார் குறியீடு ' பழநி பஞ்சாமிர்தத்திற்க்கு!

வியாழன் ஓகஸ்ட் 15, 2019

ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த பொருள் தரத்துடன், மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும்.

புவிசார் குறியீடு வழங்கும் பொருளை சம்பந்தப்பட்ட பகுதியைத் தவிர, பிறஇடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

திருப்பதியில் லட்டு போல, பழநி முருகன் கோயிலின் பிரசாதமான 'பஞ்சாமிர்தம்' உலக பிரசித்திபெற்றது.

எனவே பழநி பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2016ம் கோயில் நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள இதற்கான மையம் டில்லியில் உள்ள தலைமையகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழக கோயில்களில் முதன்முறையாக பிரசாதத்திற்கென புவிசார் குறியீடு பெறுவது பழநி பஞ்சாமிர்தத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாமிர்தத்தை முறைப்படி தயார் செய்தால் அதிபட்சம் 15 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தலாம். கோயில் நிர்வாகம் அரைக் கிலோ டப்பா ரூ. 35, டின் ரூ.40, கிப்ட் பாக்ஸ் ரூ.300க்கு விற்கிறது.

பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்க ஆட்சேபம் இருப்பின் ஆக.,12க்குள் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டனர்.

ஆட்சேபம் எதுவும் இல்லாததால் புவிசார் குறியீடு கிடைப்பது உறுதியாகிவிட்டது.

விரைவில் டில்லியில் உள்ள மையம் மூலம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.