பயனாளர்களின் விவரங்களை ஹாங்காங் நிர்வாகம் கேட்க தடை

செவ்வாய் ஜூலை 07, 2020

ஹாங்காங்கில் உள்ள பயனாளர்களின் விவரங்களை தரும்படி ஹாங்காங் நிர்வாகம் கேட்க இருந்த நடைமுறையை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது.

சீனாவில் கட்டுப்பாட்டில் தன்னாச்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருந்து வந்த ஹாங்காங்கில் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வந்தது. 

மேலும், சீனாவை போல் அல்லாமல் ஹாங்காங்கில் சமூக வலைதளங்களில் அரசின் தணிக்கை நடைமுறைகள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க கருத்துரிமை நிலவி வந்தது. 

அதேபோல், முன்னதாக ஹாங்காங் நிர்வாகம் சமூக வலைதளவாசி ஒருவரின் விவரங்களை பெறவேண்டுமானால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரிக்கை வைப்பதற்கு முன் அந்நகர நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறவேண்டும்.

ஆனால், தற்போது சீனாவின் தேசிய பாதுகாப்புச்சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் சீன அரசு செயல்பட்டு வருகிறது.

 

கோப்பு படம்

குறிப்பாக, சமூக வலைதளத்தில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.

இதற்காக, ஹாங்காங் சமூகவலைதள பயனாளர்களின் விவரங்களை டுவிட்டர், பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனமான வாட்ஸ் அப் போன்றவற்றிடம் இருந்து அதிகாரத்தை பயன்படுத்தி வாங்க முயற்சிகளை மேற்கொண்டது. 

குறிப்பாக, சீனா தற்போது அமல்படுத்தியுள்ள புதிய சட்டத்தின் மூலம் நீதிமன்ற அனுமதியின்றி சமூகவலைதள நிறுவனங்களிடம் நேரடியாக தகவல்களை கேட்க முடியும். 

இதனால், கைது நடவடிக்கையை சந்திக்கலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் பயனாளர்களின் விவரங்களை ஹாங்காங் அரசாங்கமோ, சட்டம் ஒழுங்கு அதிகாரிகளோ கேட்க இருந்த நடைமுறைகளுக்கு டுவிட்டர், டெலகிரமாம், பேஸ்புக் அதன் கிளை நிறுவனமான வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதள நிறுவனங்கள் தடை விதித்துள்ளது. 

இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஹாங்காங் மக்களின் சமூக கணக்கு விவரங்களை அப்பகுதி அரசாங்கமோ, அதிகாரிகளோ இனி பெற முடியாது. 

சமூகவலைதள நிறுவனங்களின் இந்த நடவடிக்கை மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட்டு, அடக்குமுறைகளுக்கு உள்ளாவது தடுக்கப்படலாம் என சமூக செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஆனால், இந்த செயல் மூலம் பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனமான வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் சீனாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் தடை விதிக்கப்படலாம் என பரவலான கருத்துக்கள் நிலவி வருகின்றன.