பயங்கர வாதிகள் பாக்டீரியாக்கள்,வைரஸ்களை ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புக்கள் அதிகம்!!

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

இனி வருங்காலங்களில், பயங்கர வாதிகள், மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புக்கள் அதிகம் என,ஹார்வர்டு சட்டக் கல்லூரி ஆராய்ச்சியாளர் விவேக் வாத்வா கணித்துள்ளார்.

அண்மையில் வெளியாகிஉள்ள பாரின் பாலிசி என்ற வெளியுறவுக் கொள்கை குறித்த ஆய்விதழில், விவேக் வாத்வா அது குறித்து ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அதன்படி, தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை,நாம் ஒரு ஒத்திகையாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இந்த ஒத்திகையிலிருந்து நாம் விரைவில் பாடம் கற்றுக்கொண்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டே ஆகவேண்டும்.
இயற்கையாக உருவான கொரோனா வைரஸ் போலவே, கேடு விளைவிக்கும் வேறு பல தொற்றுக் கிருமிகளை செயற்கையாக உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் தற்போது பரவலாக, கிடைத்து வருவதை விவேக் சுட்டிக் காட்டியுள்ளார்.

'கிரிஸ்பர்' போன்ற மரபணு திருத்த தொழில்நுட்பங்களை வைத்து, சிறிய பயங்கரவாத குழுக்கள் கூட பெருந்தொற்றுக்களை ஏவி விட முடியும் என விவேக் கணித்துள்ளார்.