ராமேசுவரம் கடல் பகுதிகளில் தீவிர ரோந்து!

வெள்ளி அக்டோபர் 11, 2019

சீன அதிபர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கடற் பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுத்தில் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னையில் உச்சக்கட்ட காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன.

இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லையையொட்டி உள்ள ராமேசுவரத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமநாத சுவாமி கோவிலில் அனைத்து பகுதிகளிலும் காவல் துறை சோதனை நடத்தினர். பக்தர்கள் உடமைகள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

பாம்பன் ரெயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 

இதேபோல் பாம்பன் -ராமேசுவரம் தீவை இணைக்கும் ரெயில், மேம்பாலத்தில் காவல் துறை  பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாம்பன் ரெயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் தொண்டி முதல் மண்டபம், தனுஷ் கோடி வரையிலான கடலில் இந்திய கடற்படையின் கப்பல்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமும் சர்வதேச கடல் எல்லை கண்காணிக்கப்பட்டு வருகிறது.