ராணுவ உலங்கு வானூர்தி! மர்மம் நீடிக்கும் விபத்து!

புதன் டிசம்பர் 08, 2021

சென்னை- அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உயர்தர பாதுகாப்பு வசதிகளை கொண்ட ரஷ்யாவின் IAF Mi - 17V5 ரக உலங்கு வானூர்தி எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் மர்மம் நீடிக்கிறது.

வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரிக்கு செல்வதற்காக முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் IAF Mi - 17V5 ரக உலங்கு ராணுவ வானூர்தியில் சென்று கொண்டிருந்தபோது, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அடர்ந்த மலை பகுதியான காட்டேரி மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிகழ்விடத்திலேயே ராணுவ உலங்கு வானூர்தி வெடித்து சிதறியதில், அதில் பயணம் செய்த 13 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உலங்கு வானூர்தி விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட போதிலும் ராணுவ உலங்கு வானூர்தி எப்படி விபத்துக்குள்ளானது என்பதில் மர்மம் நீடிக்கிறது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் விபத்திற்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.