ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி தேசத்துக்கு எதிராக செயல்பட்டது அம்பலம்!

ஞாயிறு சனவரி 24, 2021

டி.ஆர்.பி. மோசடி வழக்கில் பார்க் (BARC) மாஜி சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவுடன் ரிபப்ளிக் தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்த 500 பக்க உரையாடலை மும்பை காவல்துறை வெளியிட்டுள்ளனர்.

டி.ஆர்.பி. மதிப்பீடு விவகாரத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு முக்கிய விவகாரங்களில் இடைத்தரகரைப் போல அர்னாப் கோஸ்வாமி செயல்பட்டதும் இந்த வாட்ஸ் அப் உரையாடல்களில் அம்பலமாகி உள்ளது.

தனியார் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ், தொலைக்காட்சி காலத்தில் இருந்தே அர்னாப் கோஸ்வாமி தீவிர வலதுசாரியாக சர்ச்சைகளில் சிக்கியவர். ஒருகட்டத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சி என சொந்தமாகவே தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தினார்.

அர்னாப் கோஸ்வாமி, தமது ரிபப்ளிக் தொலைக்காட்சி மதிப்பீட்டை முறைகேடாக அதிகரித்தது மகாராஷ்டிரா காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதுநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் சி.இ.ஓ விகாஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான பார்க் அமைப்பின் முன்னாள் சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவும் அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடியதன் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

மும்பை காவல்துறையினர் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் இந்த உரையாடல்கள் ஆதாரங்களாக இணைக்கப்பட்டுள்ளன. 500 பக்கங்களை கொண்ட இந்த உரையாடல் தொகுப்பை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் நாட்டையே அதிரவைக்கும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் அல்லது உரிமையாளரான அர்னாப் கோஸ்வாமி, மத்திய அரசின் பல முக்கிய முடிவுகளில் இடைத்தரகர் போல செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்படுவது முன்கூட்டியே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்திருக்கிறது. அதேபோல் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாகவும் பார்த்தோ தாஸ் குப்தாவுடன் வாட்ஸ் அப்பில் அர்னாப் கோஸ்வாமி உரையாடியது தெரியவந்துள்ளது.

மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதையும் இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனை சுட்டிக்காட்டியுள்ள பிரசாந்த் பூஷண், ஊடகத்தை பயன்படுத்தி அதிகார தரகராக அர்னாப் கோஸ்வாமி செயல்பட்டிருப்பதையே இந்த உரையாடல்கள் அம்பலப்படுத்துகின்றன.

இந்த நாட்டில் சட்டம் என ஒன்று இருந்தால் அர்னாப் கோஸ்வாமி நீண்டகாலம் சிறையில் தள்ளப்பட வேண்டியவர் என கொந்தளித்திருக்கிறார்.