ரஜினி தொடர்ந்து ரசிகர்களையும் மக்களையும் குழப்பும் வகையிலேயே கருத்து!

வெள்ளி செப்டம்பர் 20, 2019

முக்கிய பிரச்சினைகளில் ரஜினி தொடர்ந்து ரசிகர்களையும் மக்களையும் குழப்பும் வகையிலேயே கருத்து தெரிவிப்பதாக சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். 25 ஆண்டு கால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார்.

தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.
தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்கப்போவதாக அறிவித்தார்.

அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார்.

உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.

தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்காத ரஜினி தனது பேட்டிகளில் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி தொடங்கி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார்.

இன்னும் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட ரஜினியின் பேச்சுகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் ரஜினி தொடர்ந்து ரசிகர்களையும் மக்களையும் குழப்பும் வகையிலேயே கருத்து தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர்.

கடந்த வாரம் இந்தி மொழியை நாட்டின் பொது மொழியாக்க வேண்டும் என்ற ரீதியில் அமித்ஷா பதிவிட்டது சர்ச்சையானது.
இதுபற்றி நேற்று ரஜினி தனது கருத்தை தெரிவித்தார்.

அப்போது எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி என ஒன்று இருந்தால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் நல்லது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி ஒரே மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மொழியை நாட்டின் பொதுமொழியாக கொண்டு வர முடியாது. இந்தியை திணித்தால் தமிழ்நாடு மட்டும் அல்ல, தென் இந்திய மாநிலங்கள் ஏன் வட இந்திய மாநிலங்களிலே கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று கூறினார்.

ரஜினியின் இந்த கருத்து அவர் இந்தி திணிப்புக்கு ஆதரவா?

எதிர்ப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருந்தது. ரஜினி முக்கிய வி‌ஷயங்களுக்கு தெரிவித்த இதுபோன்ற கருத்துகளை ஒன்றாக இணைத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

கட்சி தொடங்குவதாக அறிவித்த போது ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினி பின்னர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தாம் பெரியார் வழியில் செல்வதாக கூறினார்.

தூத்துக்குடி கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் சென்னை திரும்பியபோது கொடுத்த பேட்டியில் போராட்டத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்.

இதேபோல் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தபோது ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும்’ என்று கூறினார்.
´
Metoo´ விவகாரம் குறித்த கருத்தின் போது ´Metoo´ இயக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது. அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்த கூடாது’ என்றார்.

கட்சி தொடக்கம் பற்றிய கேள்விக்கு கட்சிக்கான 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் இப்போதைக்கு இல்லை’ என்று தெரிவித்தார். இப்படி ரஜினி பேசிய கருத்துகளை ஒன்றாக தொகுத்து அவர் ரசிகர்களை குழப்புகிறார் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ரஜினியின் கருத்து பாணியில் ‘சிக்கன் பிரியாணி சுவையாக இருக்கும்.

ஆனால் கோழியை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’, ‘மழை பெய்தால் நாட்டிற்கு நல்லது…

ஆனால் அது மண்டை மீது பெய்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ போன்ற பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.