ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி!

ஞாயிறு ஜூலை 28, 2019

பொ.ஜ.முவும் சு.கவும் இணை­யாது; எமது கூட்­ட­ணியில் மைத்­தி­ரி­யையும் உள்­ளீர்க்க தயார்

கூட்­ட­மைப்பு எமது கூட்­ட­ணியில் இணை­யாது; விக்கி தரப்பு சிந்­தித்து தீர்­மா­னிப்­பதே சிறந்­தது
 

ஜனா­தி­பதித் தேர்தல் திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­ற ­வுள்­ள­தோ­டு, நாம் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து புதிய வேட்­பா­ளரை நிறுத்­த­வுள்ளோம். எமது தரப்பில் வேட்­பாளர் குறித்து பிரச்­சி­னைகள் இல்லை. கரு, சஜித், நான், சம்­பிக்க என நீண்ட பட்­டியல் உள்­ளது. எவ்­வா­றா­யினும் எமது அடுத்த ஆட்சி ஞானம் நிறைந்த தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் இணைத்­த­தா­கவே அமையும் என்று சுகா­தார,போச­னைகள் சுதேச மருத்­து­வத்­துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன  வழங்­கிய விசேட செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு:

கேள்வி:-இட­து­சா­ரித்­துவ கொள்­கை­யு­டனும் போராட்­டத்­து­டனும் ஆரம்­பித்த உங்­களின் அர­சியல் பயணம் தற்­போது எவ்­வா­றுள்­ளது?

பதில்:-கால­மாற்­றத்­துக்கு ஏற்ற வகையில் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இரு­கின்­றது.

கேள்வி:-அர­சாங்­கத்தில் அங்­கத்­துவம் வகிக்­கும்­போது உங்­களின் போராட்­டக்­குரல் அதிகம் மேெலழு­வ­தில்­லையே?

பதில்:-அர­சிலோ அல்­லது எதிர்க்­கட்­சி­யிலோ எங்­கி­ருந்­தாலும் கொள்­கைக்­கா­கவே எனது போராட்டம் இருக்­கின்­றது.

கேள்வி:-மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­ய­போது அவர் குறித்து பல சான்று உறு­தி­களை வழங்­கி­யி­ருந்த நீங்கள் அவ­ரு­டைய போக்கில் மாற்­றங்கள் ஏற்­ப­டு­வதை முன்­கூட்­டியே அறி­ய­வில்­லையா?

பதில்:- அவ­ரு­டைய போக்கில் மாற்றம் ஏற்­பட்­டதை நான் அவ­தா­னித்தேன். அவ­ருடன் இருந்த நெருங்­கிய நட்பின் கார­ண­மாக அவ­ரு­டைய பாதையில் நானும் இணைவேன் என்று அவர் நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். எனினும் எனது அர­சியல் கொள்­கையை கைவிட்டு நட்­புக்கு முத­லிடம் அளிக்க நான் விரும்­ப­வில்லை. அத்­துடன் நிறுத்­தாது அவ­ரு­டைய தவ­றான போக்­குக்கு எதி­ராக நானே முன்­னிலை வகித்து போரா­டினேன். நாம் இரு­வரும் ஆரம்­பித்த பய­ணத்தின் பாதையில் இடை­ந­டுவில் ஜனா­தி­பதி மைத்­திரி நின்­று­விட்டார். நான் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்றேன்.

கேள்வி:- ஒக்­டோபர் 26இல் ஆட்­சியை மாற்­று­வது குறித்து உங்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­திரி பேசி­யி­ருந்­தாரா? அது­பற்றி தாங்கள் ஏதா­வது அறிந்­தி­ருந்­தீர்­களா?

பதில்:- என்­னுடன் அவர் எதுவும் பேச­வு­மில்லை. அவ்­வா­றா­ன­தொரு விடயம் நடக்­க­வி­ருப்­பதை நான் அறிந்­தி­ருக்­க­வு­மில்லை.

கேள்வி:- முதலில் எந்த தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க தயா­ராகி வரு­கின்­றீர்கள்?

பதில்:- எந்த தேர்தல் நடை­பெ­றாது விட்­டாலும் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும். அதற்கு முகங்­கொ­டுக்க தயா­ரா­கவே உள்ளோம்.

கேள்வி:- உங்­க­ளு­டைய தரப்­பிலும் பரந்­து­பட்ட கூட்­டணி பற்றி பேசப்­ப­டு­கின்­றதே? அதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எவ்­வா­றுள்­ளன?

பதில்:- பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் அடை­யா­ளத்தில் எம்­முடன் இணைந்து கொள்­வ­தற்கு விருப்­ப­மற்­ற­வர்கள் இருக்­கின்­றார்கள். ஆகவே தான் நாம் புதிய பெயரில், பொதுச் சின்­னத்தில், புதிய கொள்­கையில் கூட்­ட­ணியை அமைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அதில் இணை­வ­தற்கு பல தரப்­புக்கள் முன்­வந்­துள்­ளன.

கேள்வி:- கூட்­ட­ணியில் சுதந்­தி­ரக்­கட்­சியின் தரப்­பி­னரும் இணை­யவுள்­ள­னரா?

பதில்:- அத்­த­ரப்­பிலும் பலர் இணை­ய­வுள்­ளார்கள். அக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள், தொழிற்­சங்­கத்­தினர், சிவில் அமைப்­புக்கள் எனப் பலர் முன்­வந்­துள்­ளனர்.

கேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியின் தரப்­புக்கள் இணை­வதால் மீண்டும் முரண்­பா­டுகள் ஏற்­ப­டாதா?

பதில்:- கடந்­த­மு­றை­போன்று இரண்டு கட்­சி­க­ளாக இணை­ய­வில்லை. ஒரு தலைமை, சின்னம், கொள்­கையின் கீழ் தான் அவர்கள் கைகோர்க்­க­வுள்­ளனர்.

கேள்வி:- ஐ.தே.க.தனது கொள்­கையை கைவிட்டு பொதுக்­கொள்­கையை ஏற்­றுக்­கொள்­ளுமா?

பதில்:- ஐக்­கிய தேசியக் கட்சி 1977இலி­ருந்து ஒரே கொள்­கையின் கீழ் இருந்­தி­ருக்­க­வில்­லையே.காலத்­திற்கேற்ற ­வ­கையில் அதன் கொள்­கையில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

கேள்வி:- எவ்­வா­றா­யினும் கூட்­ட­ணியில் ஐ.தே.க.வே பிர­தான கட்­சி­யாக இருக்­கப்­போ­கின்­றதே?

பதில்:- ஐ.தே.க.வின் பாரா­ளு­மன்றக் குழு கூட்­டத்தில் ஐ.தே.கவாக செயற்­பட்டு தேர்­தல்­களில் வெற்றி பெற­மு­டி­யாது என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆகவே தான் கூட்­டணி அமைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மஹிந்த தரப்­பிலும் கூட்­ட­ணியே கள­மி­றங்கும். யாராலும் தனித்து செயற்­பட்டு வெற்றி பெற முடி­யாது. பூகோள சூழ­லிலும் கூட்­ட­ணி­களே ஆட்­சி­ய­மைக்கும் நிலை­மைகள் அதி­க­ரித்­துள்­ளன.

கேள்வி:- புதிய கூட்­ட­ணியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி ஆகி­ய­வற்றை இணைத்­துக் ­கொள்­வது பற்றி கரி­சணை கொண்­டி­ருக்­கின்­றீர்­களா?  

பதில்:- கூட்­ட­மைப்பு கூட்­ட­ணியில் இணை­யாது விட்­டாலும் அவர்­க­ளுடன் இணக்­கப்­பா­டொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விழைவோம். அதே­போன்று ஜே.வி.பியும் எம்­முடன் இணை­யாது விட்­டாலும் ராஜ­பக் ஷ தரப்­பையா எம்­மையா ஆத­ரிப்­பது என்ற தெரி­வொன்றை மேற்­கொள்ள வேண்­டி­யேற்­படும்.

கேள்வி:- கூட்­ட­மைப்பு தற்­போ­தைய அர­சாங்­கத்­தினை பல சந்­தர்ப்­பங்­களில் பாது­காத்­தி­ருக்­கின்ற போதும் தமிழ் மக்­களின் எந்­த­வொரு பிரச்­சி­னை­களுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் உங்­களின் புதிய கூட்­டணி மீது  நம்­பிக்கை கொள்­ள­வேண்டும் என்று எந்த அடிப்­ப­டையில் தமிழ் மக்­களை மீண்டும் கோரு­வீர்கள்?

பதில்:- ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இருந்த நிலை­மை­க­ளையும் தற்­போ­துள்ள நிலை­மை­க­ளையும் பார்க்­கின்­ற­போது பாரிய இடை­வெ­ளிகள் ஏற்­பட்­டுள்­ளதை மக்­களே அறி­வார்கள். அர­சாங்­கத்­துக்கு எதி­ராக, தமிழ் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக போரா­டு­கி­றார்கள். நாம் ஜன­நா­யக வெளியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரா­டினோம்.  அதன்­மூலம் கிடைத்த பிர­தி­ப­லிப்­புக்­களே இவை­யா­கின்­றன என்­பதை நினைக்கும் போது எமக்கு மகிழ்ச்­சி­யாக உள்­ளது.

கேள்வி:- ஜன­நா­யக வெளி ஏற்­பட்­டது என்­ப­தற்கு அப்பால் வாழ்­வியல் பிரச்­சி­னை­களை முன்­வைத்து போராடும் மக்­க­ளுக்­கான தீர்வு என்ன?

பதில்:- புதிய அர­சி­ய­ல­மைப்பு, காணிகள் விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விடு­தலை, உள்­ளிட்ட பல விட­யங்கள் பகு­தி­ய­ளவில் இருக்­கின்­றன. அவற்றை முழு­மை­யாக பூர்த்தி செய்ய வேண்டும் என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். காணா­மல்­போ­ன­வர்கள் பற்­றிய அலு­வ­ல­கமும் முழு­மை­ய­டை­வில்லை. காணா­மல்­போ­ன­வர்கள் மர­ணித்­து­விட்­டார்கள் என்று சான்­றிதழ் வழங்க முடி­யாது. அவ்­வாறு வழங்­கினால் அவர்கள் மீண்டு வரு­கின்­ற­போது பிறப்­புச்­சான்­றி­தழை வழங்­கு­வ­தற்கு உல­கத்தில் எங்­குமே சட்­ட­மில்லை. அது­வொரு சிக்­க­லான விட­ய­மாக இருக்­கின்­றது. ஆனால், அதற்கு தீர்வு வழங்­கப்­பட வேண்டும்.

கேள்வி:- இந்­த­வி­ட­யங்­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தாக பல தட­வைகள் கூறப்­பட்­டுள்ள போதும் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­க­வில்­லையே?

பதில்:- எமது கூட்­டணி ஆட்­சியில் அமர்­கின்­ற­போது குழப்­பங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பில்லை. ஆகவே எமது காலத்தில் இந்த விட­யங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும். அதற்­காக இறு­தி­வ­ரையில் நான் பாடு­ப­டுவேன் என்று பொறுப்­புடன் உறு­ய­ளிக்­கின்றேன்.  

கேள்வி:- விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான மாற்றுக் கூட்­ட­ணியை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- அந்த அணி­யினர் தமது பிர­தான எதி­ரி­யாக கூட்­ட­மைப்­பையே கரு­கின்­றனர். இவ்­வா­றான கூட்­ட­ணிகள் குறு­கி­ய­வட்­டத்­திற்குள் நின்று சிந்­திப்­பது தான் பெரிய தவ­றாக இருக்­கின்­றது. கூட்­ட­மைப்­பினை பிர­தான எதி­ரி­யாக கொண்டு அவர்கள் செயற்­ப­டும்­போது அது இன­வா­திகள் ஆட்­சியில் அம­ரு­வ­தற்கே வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­தி­விடும். இதனை மக்கள் உண­ரு­கின்ற சந்­தர்ப்­பத்தில் அவர்­க­ளுக்­கான ஆத­ரவை நீக்கி விடு­வார்கள். கடந்த காலத்தில் இட­து­சாரி கட்­சிகள் வலு­வி­ழந்­தமை சிறந்த உதா­ர­ண­மா­கின்­றது.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்­களின் வகி­பா­கத்­தி­னையும் கருத்­தில்­கொள்­ள­வேண்­டி­யேற்­ப­டு­மல்­லவா?

பதில்:- ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்­களின் செயற்­பா­டு­களே அத்தரப்பின் எதிர்­கா­லத்­தினை தீர்­மா­னிக்கும். கூட்­ட­மைப்புக்கு எதி­ராக தீர்­மானம் எடுப்­ப­தாக நினைத்து தவ­றாகச் செயற்­பட்­டார்­க­ளாயின் அவர்­களே மர­ணத்­தினை தேடிச்­செல்லும் நிலை­மை­யையே ஏற்­ப­டுத்­தி­விடும்

கேள்வி:- முஸ்லிம் தரப்­புக்­களின் நிலைப்­பா­டு­களில் மாற்றம் ஏற்­படும் என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- இல்லை. அவர்கள் எம்­மு­ட­னேயே இருக்­கின்­றார்கள். மேலும் ஈஸ்டர் தாக்­கு­தல்­களின் பின்னர் அந்த மக்கள் மீது மேற்­கொண்ட வன்­மு­றைகள் மூலம் அவர்கள் தெளி­வான நிலைப்­பாட்­டிற்கு வந்­துள்­ளார்கள்.

கேள்வி:- பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக யார் கள­மி­றக்­கப்­ப­டுவார் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- கோத்­தா­ப­யவை கூறு­கின்­றார்கள். சமலைக் கூறு­கின்­றார்கள். மஹிந்­த­வுக்கும், நாம­லுக்கும் போட்­டி­யிட முடி­யாது. இல்­லா­விட்டால் அவர்­க­ளையும் கூறு­வார்கள். சிரந்­தி­யையும் கூறு­கின்­றார்கள். எவ்­வா­றா­யினும் ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­லி­ருந்து தான் தெரிவு இருக்­கப்­போ­கின்­றது. ஏனை­ய­வர்கள் அந்தக் குடும்­பத்­தி­ன­ருக்கு காலம்­பூ­ரா­கவும் தேங்காய் துரு­விக்­கொண்­டி­ருக்க வேண்­டி­யது தான்.

கேள்வி:- உங்­க­ளு­டைய தரப்பில் யார் கள­மி­றங்­க­வுள்ளார்?

பதில்:- ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ராஜ­பக் ஷ போன்று பரம்­பரை அல்­லது குடும்ப அர­சியல் செய்ய வேண்­டி­ய­தில்லை. எமது அணியில் கரு, சஜித், நான்(ராஜித) சம்­பிக்க என பல தெரி­வுகள் இருக்­கின்­றன. சாதா­ரண குடும்­பத்­தி­லி­ருந்து ரண­சிங்க பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது முதல் விவ­சா­யியின் மக­னையும் எமது தரப்பு தான் அரி­யா­ச­னத்தில் அம­ர­வைத்­தது. அது தான் எமது தரப்பின் முன்­மா­தி­ரித்­துவம்.

கேள்வி:- பொது­ஜன முன்­னணி, சுதந்­தி­ரக்­கட்சி கூட்­டி­ணைந்தால் அது உங்­க­ளுக்கு சவாலை ஏற்­ப­டுத்­துமா?

பதில்:- இந்த இரண்டு தரப்­புக்­களும் ஒரு­போதும் இணை­யப்­போ­வதே இல்லை.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் உங்கள் கூட்­ட­ணியில் சுதந்­தி­ரக்­கட்­சியை இணைப்­பீர்­களா?

பதில்:- அவர்கள் எமது கூட்­ட­ணியில் பங்­கேற்க முடியும். அர­சாங்­கத்தில் இணைந்­தி­ருந்த அவர்கள் ஐ.தே.கவுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து பிரிந்து சென்­றமை தவறு என்­பதை அவர்கள் புரிந்­து­கொண்­டுள்­ளார்கள்.

கேள்வி:- ஜனா­தி­பதி மைத்­திரி மீது மீண்டும் நம்­பிக்கை கொள்­ள­மு­டி­யு­மென்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- அவர் எமது அணி­யி­லி­ருந்தே ஜனா­தி­பதி பத­விக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். தற்­போதும் புரிந்­து­ணர்­வுடன் உள்ளார். ஆகவே அவ­ரையும் ராஜ­பக் ஷ ஆட்­சிக்கு எதி­ரான  போராட்­டத்தில் இணைத்­து­கொள்ள முடி­யு­மா­க­வி­ருந்தால் அதற்கும் தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் தலை­மையில் ஆரம்­பித்த போராட்டப் பய­ணத்தின் இரண்­டா­வது அத்­தி­யாயம் தான் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லாகும். ஆகவே அவர் அதி­லி­ருந்து விலகிச் செல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

கேள்வி:- முத­லா­வது அத்­தி­யா­யத்­திற்கு தலைமை வகித்­த­வ­ருக்கு இரண்­டா­வது அத்­தி­யா­யத்தில் வழங்­கப்­படும் பாத்­திரம் என்ன?

பதில்:- பத­விகள் தொடர்பில் பின்னர் கலந்­து­ரை­யா­ட­மு­டியும். முதலில் கொள்கை ரீதி­யாக ஆரம்­பித்த அர­சியல் பய­ணத்­தினை முன்­னெ­டுத்து நிறைவு செய்ய வேண்டும். நாட்­டுக்­காக மக்­க­ளுக்­காக அத­னையே கவ­னத்தில் கொள்ள வேண்டும். எமது நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்ல வேண்­டு­மானால், முதலில் இன,மத,மொழி,குல பேதங்­களை ஒழிக்க வேண்டும். இத்­த­கைய அடிப்­படை பிரச்­சி­னையை விடுத்து அர­சி­ய­லுக்­காக முரண்­ப­ட­மு­டி­யாது.

கேள்வி:- தற்­போ­தைய அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்கு முன்­னின்ற மூவரில் ஒரு­வ­ராக இருக்கும் உங்­களின் பெயரும் ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் காணப்­ப­டு­கின்­ற­தல்­லவா?

பதில்:- ஆம், ஏனைய இரு­வரும் ஜனா­தி­பதி, பிர­தமர் பத­வி­களை தற்­போது வகிக்­கின்­றனர். நான் மட்­டுமே எஞ்­சி­யி­ருக்­கின்றேன்.

கேள்வி:- எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் களத்தில் உங்­களின் வகி­பாகம் என்­ன­வாக இருக்­கப்­போ­கி­ன­றது?

பதில்:- அதனைச் சற்­றுப்­பொ­றுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். 2015ஆம் ஆண்டு பொது­வேட்­பா­ள­ராக கரு­ ஜ­ய­சூ­ரி­யவே முன்­மொ­ழி­யப்­பட்டார். இருப்­பினும் அதில் சில பின்­ன­டை­வுகள் இருந்த சம­யத்தில் கரு ஜய­சூ­ரிய எனது பெய­ரையே பொது­வேட்­பா­ள­ராக முன்­மொ­ழிந்­தி­ருந்தார். அச்­ச­ம­யத்தில், சுதந்­தி­ரக்­கட்­சிக்கு தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் அதி­லி­ருந்து ஒரு­வரை நிய­மிப்போம் என்று நானே கூறி மைத்­தி­ரி­பா­லவை அழைத்து வந்­தி­ருந்தேன். ஆகவே எமது தரப்பில் வேட்­பா­ளரை நிய­மிப்­பதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை.

கேள்வி:- தாங்கள் இன்­னமும் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு இடையில் இணைப்பு பால­மாக செயற்­ப­டு­கின்­றீர்­களா?

பதில்:- ஆம், 2015இலி­ருந்து அவ்­வாறு தான் செயற்­ப­டு­கின்றேன். அது தற்­போதும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. எதிர்­கா­லத்­திலும் தொடரும்.

கேள்வி:- இந்த முயற்­சி­யினை முன்­னெ­டுக்கும் உங்­க­ளுக்கு உள்­ளக அழுத்­தங்கள் காணப்­ப­டு­கின்­ற­னவா?

பதில்:- பலர் பல்­வேறு நிலைப்­பாட்டில் இருக்­கின்­றார்கள். இருப்­பினும் பிர­தமர் ரணிலைப் பொறுத்­த­வ­ரையில் தனக்கு எதி­ராக எத்­த­கைய பிரச்­சி­னைகள் வந்­தாலும் அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கா­கவோ அல்­லது பதி­லடி வழங்­கு­வ­தற்­கா­கவோ அர­சியல் தீர்­மானம் எடுக்கும் ஒரு நப­ராக அவர் என்றும் செயற்­பட்­ட­தில்லை. அர­சியல் கொள்கை ரீதி­யான இலக்­கினை அடை­வ­தற்கு நன்­மை­ய­ளிக்­குமா என்­பதைக் கருத்­திற்­கொண்டே அவர் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்றார்.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது பற்றி நான் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். அதில் அவ­ருக்கு எந்­த­வி­மான பிரச்­சி­னை­களும் இல்லை என்­பதை உறு­தி­யாக கூறுவேன்

கேள்வி:- மத்­தியில் ஆட்­சி­ய­தி­கா­ரத்­தினைக் கொண்­டி­ருந்­தாலும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற அர­சாங்­க­மாக உள்ள நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் இதன் தாக்கம் இருக்­கு­மல்­லவா?

பதில்:- அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பிர­சாரம் செய்யும் போது எந்­த­வொரு சாதா­ரண பொது­ம­கனும் அதனை ஏற்­றுக்­கொள்வார் அல்­லவா. அதனால் தான் பின்­ன­டை­வு­களைச் சந்­திக்க நேர்ந்­தது. இருப்­பினும் தற்­போது அந்த நிலை­மை­களில் அதீத மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன.  

கேள்வி:- அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பௌத்த தேரர்­களின் குரல்கள் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­வி­டாதா?

பதில்:- கடந்த தேர்­த­லிலும், நாட்டை மீட்­டெ­டுத்த தலை­வரை மின்­சா­ரக்­க­தி­ரையில் அமர்த்த இட­ம­ளிக்கக் கூடாது என்று கூறி தேரர்கள் நாடு முழு­வதும் வலம் வந்த போதும் அதனை முறி­ய­டித்து நாம் வெற்­றி­பெற்­றி­ருந்­தோமே.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிப்­ப­தா­னது உங்­க­ளு­டைய தரப்­புக்­கான தென்­னி­லங்கை வாக்கு வங்­கியில் சரிவை ஏற்­ப­டுத்­தாதா?

பதில்:- இன­வாத பிர­சா­ரத்­தினை ஏற்­கின்­ற­வர்கள் எமக்கு எதி­ரா­கவே இருப்­பார்கள். ஆனால் சிங்­கள மக்­களில் அதி­க­ள­வா­ன­வர்கள் இன­வா­தத்­தினை மறு­த­லிப்­ப­வர்­க­ளா­கவே  தற்­போ­துள்­ளனர். ஆக­வே, அவர்­களால் யதார்த்­தத்­தினை உணர்ந்து கொள்ள முடியும்.

கேள்வி:- பிர­தமர் ரணி­லுக்கு அப்பால் புதிய தலை­மைத்­துவம் அவ­சியம் என்­பதில் உங்­களின் தனிப்­பட்ட நிலைப்­பாடு என்ன?

பதில்:- மாற்­றத்­தினை நோக்கி அடுத்த அர­சியல் பய­ணத்தில் பிரதமர் ரணிலும் உள்­வாங்­கப்­பட வேண்­டி­ய­வரே. தற்போதைய நிலையில், அரசியல், பொருளாதார ஞானம் மிக்கவராகவும் உலக அங்கீகாரம் பெற்றவராகவும் அவர் இருக்கின்றார். அவர் குறுகிய மனநிலை கொண்டவர் அல்ல. மக்கள் செல்வாக்கு கொண்டவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதில்லை. லெனின், லீ குவான் யூ போன்றவர்களை பாருங்கள். நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டு கட்டியெழுப்பியவர்கள். அதன் பின்னரே அவர்கள் மக்கள் செல்வாக்குடையவர்களாக மாறினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியை பல நெருக்கடிகளிலிருந்து மீட்டுத் தலைமைத்துவம் வழங்கியவராகவும் இருக்கின்றார்.

கேள்வி:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விடயங்களை அர்ப்பணிப்புடன் சாதித்திருப்பதாக நீங்களே ஏற்றுக்கொள்கின்ற நிலையில், ஜனாதிபதி வேட்பாளருக்காக அவர் தவிர்ந்த நபர்களை நோக்கி செல்வது ஏன்?

பதில்:- சில தலைவர்கள் அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றைச் செய்திருந்தாலும் மக்கள் செல்வாக்கினை முழுமையாக பெற்றிருக்காத நிலைமை உள்ளது. உதாரணமாக கூறுவதாயின், இந்தியாவில் பி.ஜே.பியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவராக எல்.கே. அத்வானி இருந்தாலும் அவர்களின் வேட்பாளராக மக்கள் செல்வாக்கு மிக்க வாஜ்பாய், மோடி என்றே நியமித்து வந்திருக்கின்றார்கள். அத்வானியின் தலைமைத்துவத்திலும் அவரது அர்ப்பணிப்பான விட்டுக்கொடுப்பாலும் தான் வலுவான அரசாங்கம் அமைந்துள்ளது. ஆகவே ரணில் விக்கிரமசிங்கவும் புரிதலுடன் தீர்மானங்களை எடுப்பார்.

கேள்வி:- இறுதியாக, வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாங்கள் அனைத்து சமூகங்களினதும் செல்வாக்கினை பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- இன்றிருக்கும் நிலைமை அடுத்த மூன்று மாதங்களில் இருப்பதில்லை. கடந்த தேர்தலில் இறுதி நேரத்தில் வந்த வேட்பாளர் நீண்டகாலமாக இருந்த தலைவரை தோற்கடித்திருந்தார் அல்லவா? அதுபோன்று தான் இம்முறையும் அதிரடியான மாற்றங்கள் இருக்கும்.

 

- நேர்காணல் ஆர்.ராம் -