ரோஹிங்கியா அகதிகளை ஆபத்தான தீவுக்கு தொடர்ந்து இடமாற்றும் வங்கதேசம்

வெள்ளி சனவரி 01, 2021

மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை தொடர்ந்து இடமாற்றும் நடவடிக்கையில் வங்கதேச அரசு ஈடுபட்டிருக்கிறது. 

முதல்கட்டமாக, டிசம்பர் மாத தொடக்கத்தில் இத்தீவுக்கு 1,600 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது கட்டமாக மேலும் 1,800 அகதிகளை இத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது.  

நேற்றைய தினம்(டிசம்பர் 29), 1,800 அகதிகளும் நான்கு வங்கதேச கடல்படை கப்பல்களில் மூலம் சிட்டகாங் துறைமுகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். 

இத்தீவுக்கு சுமார் 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை இடமாற்ற வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

கடல் மட்ட அதிகரிப்பால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் வங்கதேசம், ஆண்டுதோறும் கடுமையான புயல்களையும் மோசமான வானிலைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பாஷன் சர் தீவை சுற்றியுள்ள கடலோர பகுதியிலேயே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன. 

கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.  இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், இப்படியொரு திட்டத்தை வங்கதேசம் முன்வைத்த போது மனித உரிமை அமைப்புகள் கடுமையான எதிர்ப்பினை பதிவுச்செய்திருந்தன. அதையும் மீறி, இத்தீவை மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த தீவாக மாற்ற தீவிரம் காட்டிய வங்கதேசம், அதற்காக  280 மில்லியன் டாலர்களை ஒதுக்கி தற்போது அதனை ரோஹிங்கியா அகதிகள் வசிப்பதற்கான முகாம்கள் கொண்டு தீவாக மாற்றியிருக்கிறது.