ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கில்லை: இந்தியாவுக்கு வங்கதேசம் பதில் 

திங்கள் மார்ச் 01, 2021

அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு தங்களுக்கில்லை என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். 

“அவர்கள் வங்கதேசத்தவர்கள் கிடையாது, அத்துடன் அவர்கள் மியான்மர் நாட்டவர்கள். வங்கதேச கடல் எல்லையிலிருந்து சுமார் 1,700 கிலோ மீட்டருக்கு அப்பால் அவர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு வங்கதேசத்துக்கு கிடையாது,” என மொமன் தெரிவித்திருக்கிறார். 

அவர்கள் இந்திய பகுதியிலிருந்து 147 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கின்றனர், மியான்மரிலிருந்து 324 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ள வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் மொமன், பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் இந்த அகதிகளை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, இந்த அகதிகளை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் திருப்பி அனுப்புவதற்கு வங்கதேச அரசுடன் பேசி வருவதாக இந்திய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அனுரக் சிறீவஸ்தவா கூறியிருந்த நிலையில் வங்கதேசத்தின் கருத்து ‘சுமார் 90 ரோஹிங்கியா அகதிகளின் நிலை என்னவாகும்?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. 

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான வங்கதேசத்தின் பதில் குறித்து இந்திய தரப்பில் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை. 

அதே சமயம், இது தொடர்பாக பேசியுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இந்திய அதிகாரி ஒருவர், உணவு மற்றும் தண்ணீரை வழங்கி உதவ மட்டுமே இந்தியா எண்ணியுள்ளது, அவர்களை கரைக்கு அழைத்து வருவதுப் பற்றிய எண்ணம் இந்தியாவிடம் இல்லை எனக் கூறியுள்ளார்.