ரோயல் பார்க் கொலையாளி போன்று துமிந்தவும் விடுதலை பெறுவாரா ?

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய மரணதண்டனை கைதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் வெற்றி பெற்றால் துமிந்த சில்வா போன்றவர்களும் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருக்ணிகா பிரேமச்சந்திர, இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக செயற்படும் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதில் எமது பங்களிப்பும் இருந்தமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோயல் பார்க் கொலையாளிக்கு மரணதண்டனை வழங்கியமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பொது மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதாவது பொதுமன்னிப்பு வழங்கும் தீர்மானம் ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானமாகும். இதில் அமைச்சரவை தலையிட முடியாது.
இவ்வாறு திடீரென கொலைக் குற்றவாளியான மரண தண்டனை கைதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் என்னுடைய தந்தையை சுட்டுக் கொன்ற துமிந்த சில்வா போன்றோரும் விடுவிக்கப்படலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறான ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்ததில் எமது பங்களிப்பும் காணப்படுகின்றமை கவலையளிக்கிறது. எனினும் ஜனாதிபதி செய்த தவறை எம்மால் நேரடியாக சுட்டிக்காட்ட முடியும்.
கொலையுடன் தொடர்புடையவர் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவரை இவ்வாறு தன்னிச்சையாக விடுவிப்பதாக இருந்தால் நாட்டில் நீதித்துறை என்பதே அவசியமற்றது. இவ்வாறான ஒருவர் தற்போது அல்லது எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்தால் எம்மால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு கொலைக் குற்றவாளி விடுவிக்கப்பட்டமையால் தம்மையும் விடுவிக்குமாறு கோரி வெலிக்கடை சிறை கைதிகள் இருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
அவர்களது போராட்டம் நியாயமற்றது என்று கூற முடியாது. காரணம் கொலை அல்லாமல் வெவ்வேறு குற்றங்களுடன் தொடர்புபட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகள் தொடர்பில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியிருக்க முடியும். எனினும் ஜனாதிபதி அதனை செய்யவில்லை. எவ்வாறிருப்பினும் அவர் செய்தது நியாயமற்ற செயலாகும். ஆனால் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் எந்த சந்தர்ப்பத்திலும் நீதித்துறையின் முடிவுகளில் தலையிட மாட்டேன் என்று தெரிவித்திருக்கின்றமை பெருமைக்குரிய விடயமாகும். எனினும் போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன் என்று விடாப்பிடியாக இருந்த ஜனாதிபதி இன்று கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
இன்னும் இரு நாட்களில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மாற்றம் நாட்டில் நிகழவிருக்கிறது. கொலை குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் நடமாட விடாமல் நீதித்துறையின் தீர்ப்பில் தலையிடாத தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்ட நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.