ரஷிய கடற்படை தலைமையகத்தில் டிரோன் தாக்குதல்

திங்கள் ஓகஸ்ட் 01, 2022

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 150 நாளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ரஷியாவின் கருங்கடல் கடற்படை முக்கிய பங்கு வகித்து வருகிறது.

கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷிய போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்குச் சொந்தமான கிரீமியா தீபகற்பத்தில் உள்ள செவஸ்டோபோல் நகரில் ரஷிய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை இந்த கடற்படை தலைமையகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவில் நேற்று கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.