ரஷ்ய அதிபர் புதினுக்கு கொரோனா? தனிமை படுத்தியதாக தகவல்-

செவ்வாய் செப்டம்பர் 14, 2021

ரஷ்யா- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதின் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. அந்நாட்டில் தொற்று பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளது. 

மேலும் ரஷ்யாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக 17 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிபர் விளாடிமிர் புதின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புதின் தஜிகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது, தஜிகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த திங்களன்று பொதுவெளியில் புதின் தோன்றினார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடிய அவர், எனக்கு நெருக்கமானவர்கள் நிறையப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, என்னை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன் என கூறியிருந்தார்.

ரஷ்ய அதிபர் புதின் பிறருடன் கலந்துரையாடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற புகைப்படங்கள் அவ்வபோது வெளியிடப்படும். கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக புதின் அறிவித்தார். எனினும் இது தொடர்பாக எவ்வித புகைப்படமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.