ருவாண்டா இனப்படுகொலையாளிகளுக்கு தஞ்சம் வழங்கிய ஆஸ்திரேலியா

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே உள்ள அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், ருவாண்டாவைச் சேர்ந்த மூன்றாவது நபருக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1994 ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய ஹூட்டு இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்பட்டது கடந்த மே மாதம் அம்பலமானது. கடந்த நவம்பர் 2018ல் மீள்குடியேற்றப்பட்ட லியோனிடஸ் பைமேன்யிமானா மற்றும் க்ரிகோரி நியமினனி என்ற அந்த இரு நபர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு அமெரிக்கர்களின் கொலையில் சம்பந்தப்பட்டவராக கருதப்பட்ட மூன்றாவது நபர் பிரான்கோஸ் கரேகிக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் தஞ்சமளிக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு உகாண்டா மழைக்காட்டிற்கான பயணத்தின் போது கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கர்களின் வழக்கில தொடர்புடையவராக கருதப்பட்ட இவர் 2003ல் அமெரிக்காவுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார். பின்னர், அவரின் வாக்குமூலம் ருவாண்டாவில் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் வாங்கப்பட்டதாக வழக்கு கைவிடப்பட்டது.
இந்த மூவரும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்படும் முன் வரை அமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம், தனி நபர் பற்றி தாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை எனக் கூறியுள்ளது. அதே சமயம், இவ்வாறு அனுமதிக்கப்படும் அனைவருக்கும் உடல்நல, குணநல மற்றும் பாதுகாப்பு பரிசோதனை நடத்தப்படும் எனக் கூறியுள்ளது உள்துறை.