ஸ்ரீ ரங்கா உட்பட அறுவருக்கு எதிராக வழக்கு பதிவு!

வெள்ளி நவம்பர் 08, 2019

கடந்த 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா செலுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனம் செட்டிக் குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில் அமைச்சரவை பாதுகாப்பு காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவுக்கு எதிராக சட்ட மா அதிபர் நேற்று வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்தார். 

அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் சட்டத்தை அமுல் செய்யாது, சந்தேக நபர் தப்பிச் செல்ல இடமளித்தமையை மையப்படுத்தி  அப்போது வவுனியா  சிரேஷ் காவல் துறை  அத்தியட்சராக இருந்த  தற்போது ஓய்வுபெற்றுள்ள பிரதி காவல் துறை  மா அதிபர்  அமரசிறி சேனாரத்ன உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராகவும்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2011 மார்ச் 30 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில்  பதிவு செய்யப்படாத லேன்ட் குறூஷர் ரக ஜீப்  ஒன்றினை  ரங்கா செலுத்தியுள்ளார்.  மதவச்சி - மன்னார் வீதியில்  மன்னார் நோக்கி பயணிக்கும் போது பாதையில் இருந்து விளகி செட்டிக் குளம் வைத்தியசாலை மதிலுடன்  மோதி விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னர் நேற்று இவ்வாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரனி தப்புல டி லிவேராவின் அலோசனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.