தைவான் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் சாய் இங் வென் மீண்டும் வெற்றி

சனி சனவரி 11, 2020

தைவானில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரான சாய் இங் வென் 2-வது முறையாக அதிபர் பதவியை பிடித்துள்ளார்.

தைவான் நாட்டில் அடுத்த அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 19.3 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது.

விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதற்கிடையே, பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தைவான் நாட்டு அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய அதிபருமான சாய் இங்-வென் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை பிடித்துள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 8 மில்லியன் வாக்குகள் பெற்று 53 சதவீதம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக சீனா ஆதரவு கட்சியான கொமிந்தாங் கட்சியின் ஹான் கோயு 38 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதையடுத்து, சாய் இங் வென் விரைவில் மீண்டும் அதிபராக பதவியேற்பார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.