தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது எங்களிற்கு தெரிந்திருந்தது

சனி நவம்பர் 21, 2020

 வனாத்தவில்லு ஜிகாத் பயிற்சி முகாமிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னர் , பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது சிஐடியினருக்கு தெரிந்திருந்தது என முன்னாள் சிஐடி அதிகாரி ரவி செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2018 டிசம்பரில் மாவனல்ல புத்தர் சிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் இந்த விசாரணைகளின் போதே வனாத்தவில்லில் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் ஒன்றிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை தேசிய பாதுகாப்பு பேரவைக்கு தெரிவிக்குமாறு அப்போதைய  காவல் துறை   மா அதிபரை கேட்டுக்கொண்டேன் என முன்னாள் சிஐடி அதிகாரி ரவி செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

எனினும் பொலிஸ்மா அதிபர் தான் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை என தெரிவித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளின் மூலம் நாங்கள் தேசியதவ்ஹீத் ஜமாத் குறித்தும் அந்த அமைப்பின் தலைவரான ஜஹ்ரான் ஹாசிம் குறித்தும் தகவல்களை பெற்றோம் என குறிப்பிட்டுள்ள முன்னாள் அதிகாரி காவல் துறை மா அதிபர் பூஜித்ஜயசுந்தரவே மாவனல்ல சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு என்னை கேட்டுக்கொண்டார்,நான் சிஐடி குழுவொன்றை அந்த பகுதிக்கு அனுப்புமாறு உத்தரவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வனாத்தவில்வு பகுதியில் சோதனைகளை மேற்கொள்வதற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிமிற்கும் தீவிரவாத செயற்பாடுகளிற்கும் இடையிலான நேரடி தொடர்புகள் குறித்து சிஐடியினருக்கு தெரிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரி எனினும் விசாரணைகளின் போது ஜஹ்ரான் அந்த இடத்திற்கு அடிக்கடி சென்றமை உறுதியாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.