டாக்டர் கலாநிதி மறைவு -வைகோ இரங்கல்

வெள்ளி செப்டம்பர் 18, 2020

 1980,84 தேர்தல்களில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, மக்கள் அவை உறுப்பினராக இரண்டு முறை பொறுப்பு வகித்த டாக்டர் கலாநிதி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

ஏழை எளிய மக்களுக்கு, தொண்டு உள்ளத்துடன் மருத்துவப் பணி செய்தார். அதனால், மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். நாடாளுமன்றத்தில் மிகச்சிறப்பாகப் பணி ஆற்றி, டாக்டர் கலைஞர், பேராசிரியரின் பாராட்டுகளைப் பெற்றார்.

தமிழ் மொழி மீதும், தமிழ் இனத்தின் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும், ஈடற்ற பற்றுக்கொண்டவர். ஈழத்தமிழர்களுக்காக அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, பலமுறை வந்து மருத்துவச் சோதனை செய்தார். மூன்று தமிழர்கள் தூக்குத் தண்டனை ரத்து செய்யக்கோரி நான்கு மகளிர் உண்ணாவிரதம் இருந்தபோதும், பலமுறை வந்து சோதனை செய்தார்.

என்மீது எல்லையற்ற அன்பு கொண்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய நூலை, பேராசிரியர் தலைமையில் என்னை வெளியிடச் செய்தார்.

அண்மையில் அவரது துணைவியார் மறைந்த அதிர்ச்சி அவரைப் பாதித்து விட்டது. அவருடைய மறைவு, ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும் இழப்பு ஆகும். அவருடைய குடும்பத்தார், உற்றார்,உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வைகோ