தாயக-புலம்பெயர் கலைஞர்கள் இணையும்போது எமக்கான அடையாளங்கள் பாதுகாக்கப்படும்!

ஞாயிறு சனவரி 12, 2020

எமது பத்திரிகையின் வாயிலாக முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்?

நான் தருமராஜா துவாரகன், யாழ்ப்பாணம் அரியாலையில் வசிக்கின்றேன். நான் எனது ஆரம்பக்கல்வியை யாழ்.
பரியோவான் கல்லூரியில் கற்று புலமைப்பரிசில் சித்தியடைந்து, தொடர்ந்து ஆங்கில மொழி மூலம் கற்று உயர்தரம் வரை கற்றேன். தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் மனிதவள முகாமைத்துவப்பிரிவில் இறுதியாண்டு மாணவனாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

கலைத்துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது?

எனது தந்தையார் ஒரு பாடகர். அவர் முறையாகச் சங்கீதம் கற்கவில்லை. ஒரு கேள்வி ஞானத்தில் தான் அவர் பாடகரானார். அதனால் பிள்ளைகள் முறையாக இசையைப் பயிலவேண்டும் என்று எனது ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும்போதே, மிருதங்கம் கற்பதற்கும் அனுப்பிவைத்தார்.

மிருதங்கத்தை 16 வருடங்கள் கற்று 2016 ஆம் ஆண்டு மிருதங்கத்தில் ஆசிரியர் தரத்தை நிறைவுசெய்து, ‘கலாவித்தகர்’ பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன். அதில் இருந்துதான் எனது இசைவாழ்க்கை ஆரம்பமானது. அதில் இருந்து ஒவ்வொரு வாத்தியக் கருவிகளையும் கற்று இன்று ‘வானவில்’ என்ற ஓர் இசைக்குழுவையும் நடாத்தி வருகின்றேன்.

111

கலைத்துறை வளர்ச்சி இன்று தாயகத்தில் எவ்வாறு உள்ளது?

தாயகத்தில் இன்று தென்னிந்திய சினிமாவில்தான் மூழ்கியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் தாயகக் கலைஞர்களுக்கான மக்களின் ஆதரவு குறைவடைந்தே செல்கின்றது. எமது தாயகத்தில் உள்ள ஊடகங்களும் தென்னிந்தியக் கலைஞர்களுக்கே தமது ஆதரவையும் முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகின்றன.

நாங்கள் இந்தக் கலைத்துறையில் முன்னேற்றம் அடைவதென்றால் எமது சொந்த முயற்சியைத்தான் கையாளவேண்டும். அத்தோடு, முகநூல் போன்ற சமூக இணைய வலைத்தளங்கள் ஊடாகத்தான் எமது திறமையை வெளியுலகிற்கு கொண்டுவரமுடிகின்றது.

அதாவது தாயகத்தில் உள்ள ஊடகங்களின் ஆதரவு ஒப்பீட்டளவில் மிகக்குறைவாகவே உள்ளது என்றே சொல்லலாம். இந்தியத் தொலைக்காட்சியில் அல்லது வானொலியில் ஒரு கலைஞர் வந்து பாடினால், அவர் மறுநாளே உலகப் புகழ்பெற்ற கலைஞராக மாறிவிடுவார். அந்த நிலைமை தாயகத்தில் உள்ள கலைஞர்களுக்கு மிகவும் குறைவாக உள்ளமை மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயம்.

இதுவரை நீங்கள் உங்கள் முயற்சியின் பயனாக உருவாக்கிய படைப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் யாழ்.பரியோவான் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தபோது, எமது பள்ளிக்கும் யாழ்.மத்தியகல்லூரிக்கும் இடையே வருடாந்தம் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டியான ‘வடக்கின் பெரும்போர்’ இனை முன்னிட்டு ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருந்தேன். அந்தப்பாடல் புலம்பெயர்வாழ் பரியோவான் கல்லூரி பழையமாணவர்கள் மத்தியிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதற்கு முன்னரும் எனது 14 வயதில் ‘‘யாழ்ப்பாண மண்ணடா கல்வியில் நாங்கள் சிங்கமடா...’’ என்ற ஒரு பாடலை உருவாக்கியிருந்தேன். அதனை வெளியிடவில்லை. பாடசாலை மட்டத்தில் நடைபெறும் கலை விழாக்களில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். மேற்கத்தேய வாத்தியங்களாக இருந்தாலும் சரி கீழைத்தேய வாத்தியமாக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியிலும் என்னுடைய பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றேன்.

பாடசாலைதான் எனது கலை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாது, பாடசாலைக் காலத்தில் தேசியமட்டத்தில் இரண்டு தடவை வில்லுப்பாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட அணியில் நான் ஒரு மிருதங்க வாத்தியக் கலைஞனாக இருந்திருக்கின்றேன்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படுகின்ற கலை நிகழ்வுகள் அனைத்திலும் இசைத்துறை சார்ந்து எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். முதலாம் வருடத்தில் இருந்து இறுதி வருடம் வரை எனது நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன.

நீங்கள் பல் வாத்தியங்களை இசைப்பதில் திறமைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது. அதுபற்றி...?

நான் 10 இசைக்கருவிகளை வாசிப்பேன், தண்ணுமை(மிருதங்கம்), சுரத்தட்டு (கீபோட்),ஒக்ரபாட், கடம், கஞ்சிரா, கிற்றார், ட்ரம்ஸ், தவில், உடுக்கு, மோசிங் போன்ற வாத்தியங்களை வாசிப்பேன். கொழும்பிலுள்ள தொலைக்காட்சி ஒன்று நடாத்திய பல்துறை சார்ந்த  போட்டி நிகழ்ச்சியில் ஓர் இசைக் கலைஞனாக  ஒரே மேடையில் 10 வாத்தியக்கருவிகளையும் வாசித்துக்காட்டியிருந்தேன்.

5 ஆயிரம் பேர் பங்குபற்றிய போட்டியில் ஒரு தமிழனாக 12 ஆம் இடம்வரை முன்னேறியிருந்தேன். அத்துடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான மிருதங்கம், கீபோட் போட்டியில் முதலிடத்தைப்பெற்றிருந்தேன். 2018 ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருதையும் பெற்றுக்
கொண்டேன்.

111

இன்று வரை உங்களின் கலைப் பயணத்தில் மறக்கமுடியாத தருணம் என்று எதனைக் கூறுவீர்கள்?

மறக்கமுடியாதது என்று சொன்னால் நிறைய இருக்கின்றது. எனது அடுத்த கட்ட வளர்ச்சி என்று பார்க்கும்போது, வெளிநாட்டுப் பயணங்களைத்தான் குறிப்பிடுவேன். இந்தியக் கலைஞர்களைத்தான் புலம்பெயர் நாடுகளுக்கு நிகழ்வுகளுக்கு அழைப்பார்கள். ஆனால், தாயகத்தில் இருந்து என்போன்ற கலைஞர்களை அழைப்பது என்பது பெரிய விடயம். தொழில் நுட்ப வசதிகள் இல்லாத நிலையிலும், ஊடக ஆதரவு இல்லாத நிலையிலும் எங்களை இனங்கண்டு எம்மை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்து இசை நிகழ்வை நடாத்துவது என்பதை பெரிய
விடயமாக நான் கருதுகிறேன்.

முதன்முதலாக 2018 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டிற்குச் சென்று இசை நிகழ்ச்சியை வழங்கியிருந்தேன். அங்கே புலம்பெயர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்புக்கிடைத்திருந்தது. அதனை எனது இசைவாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கிறேன்.

2019 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலியா நாட்டுக்கும், ஒக்ரோபர் மாதம் நோர்வே நாட்டுக்கும் தற்போது பிரான்சு நாட்டுக்கும் இசைநிகழ்ச்சியை வழங்க வந்துள்ளேன்.

இவ்வாறு புலம்பெயர் மக்கள் மத்தியில் இசை நிகழ்வை வழங்க வருவதென்பதை, எனது அடுத்த கட்ட நகர்வாகவே நான் கருதுகின்றேன்.

பிரான்சில் போக்குவரத்து பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் நிகழ்வில் கலந்துகொண்டபோது எவ்வாறு இருந்தது?

பிரான்சில் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரண்டு நிகழ்விற்காக தாயகத்தில் இருந்து என்னையும் ஏனைய கலைஞர்களையும் அழைத்திருந்தனர். இங்கு வந்தபோது, பிரான்சில் போக்குவரத்துப் பிரச்சினை இருந்தபோதிலும், 600 இற்கு மேற்பட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

அது மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்தியக் கலைஞர்கள் வந்தால்தான் மண்டபம் நிறையும் என்ற வார்த்தையைப் பொய்யாக்கிவிட்டார்கள். புலம்பெயர் நாடுகளிலும் இளம் கலைஞர்கள் வளர்ந்து வருவதையும் ஆவலோடு பார்க்கமுடிந்தது. அத்தோடு எமது வாத்தியக் கருவிகள் அழிந்துவிடாமல் புலம்பெயர்வாழ் இளைஞர்கள் பயின்றுவருவதும் பாராட்டுக்குரியது.

தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி இந்தியக் கலைஞர்கள் தான் திறமையானவர்கள் என்ற மனநிலை இருந்துவருகின்றது. எமது தாயகத்தில்தான் உலகப் புகழ்பெற்ற திறமையான கலைஞர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இதனை உணர்ந்துகொண்டு என்போன்ற தாயகத்தில் உள்ள கலைஞர்களை இங்கே அழைத்து நிகழ்ச்சிகளைச்செய்வது வரவேற்கத்தக்க விடயம்.

எமது தாயகத்தில் பல திறமையான கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் ஊக்கப்படுத்துவதுடன், புலம்பெயர் கலைஞர்களுடன் இணைந்து செயற்படும்போது, எமக்கான அடையாளங்களைப் பாதுகாக்கமுடியும் என்று நான் நம்புகின்றேன்.

புலம்பெயர் மண்ணில் உள்ள வாழ்வியல் உங்கள் பார்வையில் எவ்வாறு உள்ளது?

உண்மையிலேயே, தாயகத்தில் இருந்து பார்க்கும்போது, வெளிநாட்டில் நல்ல வசதியாக இருக்கின்றார்கள் என்ற மாயை, இங்கு வந்து பார்க்கின்றபோதுதான் தெரிகின்றது புலம்பெயர் வாழ் மக்கள் எவ்வளவோ குளிர், பனி போன்றவற்றிற்கு மத்தியில் கடினமான வாழ்வியலை வாழ்கின்றார்கள் என்று. வெளிநாட்டுக்குப் போனால் நன்றாக வாழலாம் என்பது இளைஞர்களின் மனக்கணக்கு. ஆனால், எங்கு சென்றாலும் கஸ்டப்பட்டுத்தான் வேலைசெய்யவேண்டும்.

இதற்கு புலம்பெயர்வாழ் மக்களில் ஒரு பகுதியினரும் காரணமாக உள்ளனர். அவர்கள் தாயகத்திற்கு சென்று மிக ஆடம்பரமான சில செயற்பாடுகளை செய்வதன் காரணமாக அங்குள்ள மக்கள் தவறான புரிதலை ஏற்படுத்துகின்றார்கள்.

அத்தோடு, வெளிநாட்டுப் பணத்தில் விலையுயர்ந்த உந்துருளிகளை வாங்கி இளைஞர்கள் வீதி நெறிகளை மீறி தமது உயிர்களை இழக்கும் துர்ப்பாக்கிய நிலையும் அதிகரித்துவருகின்றது.  புலம்பெயர் நாடுகளில் வந்து பார்க்கும் போதுதான் தெரிகின்றது மக்களின் இயந்திரமயமான வாழ்க்கை முறைகளைப் பற்றி.

தாயகத்தில் உள்ள உங்கள் வயதை ஒத்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

இன்று யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் வன்முறைகள், கலாசார சீரழிவுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளன. இதில் 18, 19 வயதுடைய இளைஞர்களே இவ்வாறான சீர்கேடுகளுக்கு இட்டுச்செல்லப்படுகின்றார்கள். கல்வி அடைவுமட்டங்கள் கூட ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

காரணம் இசைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடாமல் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அதாவது, இவ்வாறான இசைத்துறை, விளையாட்டுத்துறை போன்றவற்றில் ஈடுபட்டால் கல்வி பாதிக்கப்படும் என்று பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை பங்குபற்றவிடுவதில்லை.

இதனால் மாணவர்கள் வேறுதிசைக்கு கொண்டுசெல்லப்படுகின்றார்கள். எனவே, இவ்வாறான பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது அனுபவத்தின் வாயிலாக நான் சொல்வது என்னவென்றால், இசைத்துறை, விளையாட்டுத்துறை மாணவர்களின் மனநிலையை மாற்றி நேரான பாதையில் மாணவர்களை கொண்டுசெல்ல வழிவகுக்கின்றது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

சந்திப்பு:-கந்தரதன்

நன்றி: ஈழமுரசு

111