தாயகம் சென்று பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு மருத்துவப் பணி செய்ய ஆவலோடு இருக்கின்றேன்!

ஞாயிறு டிசம்பர் 08, 2019

கேள்வி: உங்களுக்கு மருத்துவத்துறையில் எவ்வாறு ஈடுபாடுவந்தது என்பதைக் கூறுங்கள்?

மருத்துவர்: எனக்கு 6 வயதாக இருந்தபோதே மருத்துவராக வருவேன் என்று சொல்லிக்கொள்வேன். அப்போதிருந்தே நான் மருத்துவராக வரவேண்டும் என்ற உறுதியை வளர்த்துக்கொண்டேன். எனது பெற்றோரும் அதற்கு உந்துசக்தியாக இருந்துவந்துள்ளார்கள்.

111

நான் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு உயர்தரத்திற்குச் செல்லும்போது மருத்துவப்பிரிவைத் தெரிவுசெய்தேன். அப்படியே தொடர்ந்து இந்நிலைக்கு வந்துள்ளேன். 2008 ஆம் ஆண்டு மருத்துவப்பிரிவில் சித்தியடைந்து 6 வருடங்கள் மருத்துவமனையில் பயிற்சியில் ஈடுபட்டேன்.

சமநேரத்தில் பல்கலைக்கழகத்திலும் மருத்துவக் கற்கையினை மேற்கொண்டு அதன்பின்னர் மேலும் ஒரு தேர்வில் சித்தியடைந்தேன். அதன் பின்னர் Anesthésie-réanimation பிரிவினைத் தெரிவுசெய்து மேலும் 5 வருடங்கள் உள்
ளகப் பயிற்சியாளராக (Internship) வேலை பார்ப்பது போன்று மருத்துவமனைகளில் பணியாற்றினேன். தற்போது அனைத்துத் தேர்வுகளையும் எழுதி முடித்து சித்தியடைந்து மருத்துவராகப் பணியாற்றுகின்றேன்.
 
கேள்வி: மருத்துவமனைகளில் நீங்கள் உள்ளகப் பயிற்சியாளராக (Internship) வேலை பார்த்த காலத்தில் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
 

மருத்துவர்: மருத்துவமனையில் நான் பணியாற்றிய வேளையில் பல அனுபவங்கள் இருக்கின்றபோதும் முக்கியமாக ஒன்றைச்சொல்லவேண்டும். அதாவது, பல தமிழ் மக்கள் நோயாளர்களாக வரும்போது, அவர்களுக்கு மொழிப்பிரச்சினை இருக்கின்றது. பிரெஞ்சுமொழி அவர்களுக்குத் தெரியாத நிலையில் அவர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளுகின்றார்கள். அவர்கள் என்னைக் கண்டவுடன், நீங்கள் தமிழா என்று ஆவலுடன் கேட்பதை என்னால் உணரமுடிந்தது.

மொழியறிவு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நான் அறியமுடிந்தது. அதன்பின்னர், நான் அங்கு இல்லா
விட்டாலும், தமிழ் நோயாளர்கள் வந்தால் உடனே எனக்குத் தொலைபேசியில் அழைப்பார்கள். நான் அருகில் இல்லை என்றால், தொலைபேசியின் வாயிலாக நான் அவர்களுக்கு மொழிபெயர்த்து உதவியிருக்கின்றேன்.

அத்தோடு, சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கத்தில் இருக்கும் நோயாளரை மயக்கம் தெளிவித்து எழுப்பும் வரை அவர்களின் வலியைப்போக்கி அனைத்து விடயங்களையும் நாங்களே கவனிக்கவேண்டும். அவ்வாறானவர்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கும் நாங்களே பொறுப்புக்கூறவேண்டும் என்ற வகையில் மிகவும் கவனமாக அவர்களைக் கையாளவேண்டும்.

அதாவது சத்திரசிகிச்சைக்கு முன்னும் சத்திரசிகிச்சையின் பின்னும் நாங்களே குறித்த நோயாளரை கவனிக்கவேண்டும். சத்திர சிகிச்சையை செய்யும் விசேடமருத்துவர் சத்திரசிகிச்சையை மட்டுமே செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி: பிரான்சில் ICU எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எவ்வாறான நோயாளர்கள் கொண்டுவரப்படுகின்றார்கள்?

மருத்துவர்: தீவிர சிகிச்சைப் பிரிவு என்று சொல்லும்போது, அதிகமாக விபத்துக்களில் படுகாயமடைபவர்களே கொண்டுவரப்படுகின்றார்கள். அதிகமாக உந்துருளிகளில் ஏற்படும் விபத்துக்களிலேயே வருவார்கள். பலர் மயக்கமடைந்த நிலையில் இருப்பார்கள். இவர்களில் பலரும் மிக இளவயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கொண்டுவரப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் காப்பாற்றப்படுகின்றார்கள்.

அத்தோடு, நீண்டகாலம் அதாவது வருடக்கணக்காக  மருத்துவமனைகளில் சிகிச்சை பேறவேண்டிய நிலையும் இவர்களுக்கு ஏற்படுகின்றது. இவர்களுடைய கல்வி மற்றும் தொழில் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறானவர்களின் குடும்பத்தினருக்கு அமைதியான முறையில் நாங்கள் ஆறுதல் வார்த்தைகளைக் கொடுக்கவேண்டிய தேவையும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், நோயாளரின் நிலை, அவர்களுக்கு எவ்வாறான வைத்தியம் பார்க்கப்படுகின்றது, எவ்வளவு காலம் எடுக்கும் போன்ற விடயங்கள் எல்லாம் பகிரப்படவேண்டும். இவ்வாறு வரும் பிரெஞ்சு மக்கள் உட்பட அனைத்து இன மக்களுக்கும் நாங்கள் ஆறுதல்களைப் பகிர்ந்துவருகின்றோம்.

குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் காயமடைந்து சிகிச்சை பெறுபவருக்கும் மனோ தத்துவ நிபுணர்கள் ஆலோசனைகளையும் ஆறுதல் வார்த்தைகளையும் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  உந்துருளி  விபத்துக்கள் மகிழுந்துகளின் தவறுகளினாலேயே ஏற்படுகின்றன.

மகிழுந்துகல் செல்வோர் உந்துருளிகளைக் கவனிக்காத நிலையிலேயே இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

மிதிவண்டிகள், துரோத்துநேற்றர்கள் போன்றவிபத்துக்கள் மற்றும் குழுமோதல்கள் அவற்றோடு திருடர்களின் மோசமான தாக்குதல்களினாலும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் கொண்டுவரப்படுகின்றார்கள்.

விபத்தினால் நீண்டகாலம் நடக்கமுடியாமல் இருக்கும் நோயாளர்களுக்கு kiné என்று சொல்லப்படுகின்ற உடற்பயிற்சியும் வழங்கப்படுகின்றது. இவ்வாறான விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு அனைவரும் ஒழுங்கான போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கே நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

கேள்வி: மருத்துவமனையில் நீங்கள் இணைந்து பணியாற்றியபோது ஆரம்பத்தில் உங்களுடைய மனநிலை எவ்வாறு இருந்தது?

மருத்துவர்: முதல் வருடத்தில் நாங்கள் தனியாக இவ்வாறான விடயங்களைச் செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அனுபவம் வாய்ந்த வேறு வைத்தியருடன் இணைந்தே பணியாற்றினேன். ஆரம்பத்தில் இவற்றை எல்லாம் பார்த்த
போது ஒரு மன அழுத்தம் இருந்தது. பின்னர் அது பழகிவிட்டது.

தொடர்ந்து மூன்றாவது வருடத்தில் நான் தனியே இவ்வாறான விடயங்களைச் செய்ய அனுமதித்தனர். அதன் பின்னர் இரவு வேலை செய்தபோது, ஓய்வுநேரம் கிடைத்தாலும் தூங்கச்செல்லமாட்டேன். ஒரு பதற்றத்தோடு எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருப்பேன். மறுநாள் காலையில் பகல்வேலைக்கு வரும் வைத்திய அதிகாரியிடம் இரவுநடந்த அனைத்து விடயங்களையும் விபரமாகச் சொல்லவேண்டும்.

இரவு வேலையின்போது எமக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், பெரிய வைத்தியரிடம் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு உதவி கேட்கமுடியும். அவர்கள் வீட்டில் இருந்தாலும் தொலைபேசியில் அதற்குரிய வழிமுறைகளைச் சொல்லுவார்கள்.

இதேவேளை வரும் நோயாளிகளை சிலவேளைகளில் எங்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால் அது எங்களின் தவறு அல்ல. நாங்கள் முடிந்தளவிற்கு முயற்சிசெய்வோம்.

மாரடைப்பு ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சைகளை முடிந்தளவிற்கு வழங்குவோம். அவ்வாறு செய்தும் அவரைக் காப்பாற்றமுடியாமல் போகும்போது அதுவும் எங்களின் தவறு அல்ல.

கேள்வி: மருத்துவமனையில் நீங்கள் வேலைபார்க்கும் போது உங்களுக்கு மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது ஏற்பட்டாதா?

மருத்துவர்: மறக்கமுடியாத சம்பவம் என்று குறிப்பிடமுடியாது. ஆனால், இரண்டுவிடயங்களை இந்த இடத்தில் குறிப்பிடவேண்டும். ஒன்று எமது பகுதியில் வசிக்கும் தமிழ் அக்கா ஒருவர் குழந்தை பெறுவதற்காக நான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவவுக்கு பிரெஞ்சுமொழி தெரியாது.

அவ அச்சத்துடன் இருந்துள்ளார். அன்று எனக்கு வேலை இல்லாதபோதும், நான் மற்றொருவருக்குப் பதிலாகப் பணிக்குச் சென்றிருந்தேன். அங்கே அந்த அக்கா என்னைக் கண்டதும் அவவுக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் எல்லா விடயங்களையும் நான் தமிழில் கேட்டு, அந்த அக்காவுக்கு உதவிபுரிந்தேன்.

பின்னர் எனது தாயாரைச் சந்தி த்த அந்த அக்கா, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உங்கள் மகனே எனக்குரிய மருத்துவ விடயங்களைச் செய்திருந்தார் என்றும்  உங்கள் பிள்ளையை மருத்துவமனையில் கண்டபோது கடவுளைக் கண்டதுபோல் இருந்தது என்றும் கூறியிருந்தார். 

இரண்டாவது, இதயநோய்ப் பாதிப்புக்குள்ளாகிய அன்ரி ஒருவர் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருவார். அவவுக்கும் பிரெஞ்சு மொழி தெரியாது, கணவருக்கும் பிரெஞ்சில் மருத்துவ ரீதியில் பேசும் அனுபவம் இல்லை.  மொழிபெயர்ப்புக்கு ஆட்களை அழைத்துச் செல்வது வழமை.

ஆனால், பிரெஞ்சுமொழிபெயர்ப்பாளர் சரியாக மொழி பெயர்க்காததால், அவரது உடல் நிலை நன்றாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்காக நான் மருத்துவமனையில் கதைத்தபோது, அவவின் உடல்நிலை பற்றித் தெரியவந்தது. 

பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்கூட்டியே அவருடைய நோய்விவரம் தெரிந்திருந்தால் அவவைக் காப்பாற்றியிருக்கமுடியும். இந்த விடயங்கள் எனது மனதில் மறக்கமுடியாதவை. ஆரம்பத்தில் கூறியதுபோல் மொழிப்பிரச்சினை இவ்வாறான நிலைமைகளுக்குக் காரணமாகிவிட்டது. 

கேள்வி: மருத்துவத்துறை மட்டுமல்லாமல் நீங்கள் வயலின் இசைப்பதிலும் வல்லவர் என்று அறிகின்றோம். அது எவ்வாறு சாத்தியமாகின்றது?

மருத்துவர்: நான் ஆறு வயதில் இருந்து வயலின் பயின்றேன். அதனைத் தொடர்ந்து ஆர்வமாகக் கற்றுவந்தேன். சிலர் மேற்படிப்பு வந்தவுடன் இவ்வாறான கலைகளை நிறுத்திவிடுவார்கள்.

111

ஆனால் நான் அவ்வாறு நிறுத்தவில்லை. இன்றும் தொடர்கின்றேன். ஒவ்வொருவாரமும் அனைவருடனும் இணைந்து குழுவாக வயலின் இசைப்பேன். நான் வயலினில் அனைத்துப் பிரிவுகளையும் முடித்து அதற்குரிய சான்றிதழையும் பெற்றுவிட்டேன்.

பல முக்கிய நிகழ்வுகளில் வயலின் இசைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதனை நான் பெருமையாக எண்ணுகின்றேன். தேவாலயத்திலும் ஒவ்வொரு வாரமும் திருப்பலியின் போது பாடலுக்கு வயலின் இசைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அனைத்துத் திருப்பலிகள் மற்றும் விசேட தினங்கள் என்பவற்றுக்கு நாங்கள் சென்று வயலின் இசைப்போம்.  2010 ஆம் ஆண்டு பிரெஞ்சுத் தொலைக்காட்சியிலும் எமது வயிலின் இசைக் காட்சியை ஒளிபரப்பியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் மருத்துவக் கற்கையைத் தொடர்ந்தபோது, வயலின் வகுப்புக்குச் செல்ல வாய்ப்புக்கிடைக்காததால் அதனை நிறுத்த எண்ணியபோது, பிரெஞ்சு வயலின் ஆசிரியை எனது வீட்டுக்கே வந்து இதனை நிறுத்த வேண்டாம் எனக்கூறி வீட்டிலேயே வகுப்பு எடுத்தார். 

வயலின் இசை எனது மருத்துவக் கல்வியை ஒருபோதும் பாதிக்கவில்லை. தொடர்ந்து புத்தகம் புத்தகம் என்று படித்துக்கொண்டிருந்தால், மூளைக்கு ஓய்வுகிடைக்காமல் போய்விடும். இவ்வாறான இசைகளை இடையில் இசைப்பதன்மூலம் மூளையை இலகுவாக வைத்திருக்கமுடியும். இது நான் அனுபவத்தின் வாயிலாகக் கண்ட உண்மை.

கேள்வி: தாயகத்துக்குச் சென்று எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் மருத்துவப் பணியைச் செய்வதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தால் என்னசெய்வீர்கள்?

மருத்துவர்: நான் நிச்சயமாக தாயகம் சென்று பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு மருத்துவப் பணியைச் செய்ய வேண்டும் என்பதில் ஆவலோடு இருக்கின்றேன். எனது பெற்றோரின் ஆசையும் அதுதான். ஆனாலும், இங்கும் நிறைய ஏழைகள் இருக்கின்றார்கள். அவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கும் உதவிசெய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.

எனது அம்மாவும் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டுவரை மருத்துவத் தாதியாகப் பணியாற்றியுள்ளார். அவவும் என்னை தாயகத்திற்கு அழைத்துச்செல்லவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாகத்தான் உள்ளார்.

கேள்வி: மருத்துவத்துறையைத் தெரிவுசெய்ய வலியுறுத்தி எமது தமிழ் மாணவர்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

மருத்துவர்: ஆரம்பத்திலேயே மருத்துவத்துறையைத் தெரிவுசெய்ய விரும்புபவர்களுக்கு, அது கடினம், அதைப் படித்தால் சித்தியடையமுடியாது என்று பல காரணங்களையும் கூறி அச்சமூட்டுவதற்கு சமூகத்தில் பலரும் இருப்பார்கள்.

ஆனால், அவற்றைக் காதில் விழுத்தாமல், அச்சமில்லாமல் மருத்துவத்துறையைத் தெரிவுசெய்து நன்றாக உறுதியோடு படித்தால் நிச்சயம் வெற்றியடைய முடியும் என்பதையே நான் எமது தமிழ் இளைஞர், யுவதிகளுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

புலம்பெயர் மண்ணில் பிறந்த எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் தற்போது உயர் தொழில்களில் நிபுணத்துவம்பெற்று எமது தமிழ் இனத்திற்கே பெருமைசேர்த்து இலைமறைகாயாக வாழ்ந்து வருகின்றார்கள். அந்தவகையில் பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான vigneux sur seine    நகரில் வசிக்கும் சத்திர சிகிச்சைப் பிரிவில் விசேட நிபுணத்துவம் பெற்ற உணர்வகற்றியல் (Anesthésie-réanimation) மருத்துவர் அன்ரன்ராஜ் வினோத் அவர்கள் அண்மையில் எமது ஈழமுரசு இதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இது.

சந்திப்பு  : கந்தரதன்

நன்றி: ஈழமுரசு