தாய்லாந்தில் கொரோனா அச்சம்

ஞாயிறு சனவரி 03, 2021

 தாய்லாந்தில் பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக, அந்நாட்டில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக்க தாய்லாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இதன் மூலம், முறையான ஆவணங்களின்றி தாய்லாந்தில் தங்கியிருக்கும் கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாட்டுத் தொழிலாளர்கள் சட்டரீதியாக சுமார் இரண்டு ஆண்டுகள் வரை தங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. 

இதில் பதிய விரும்பும் குடியேறிகள் இணையம் வழியாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் விண்ணப்பித்து பணி அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக சம்பந்தப்பட்ட குடியேறி முதலில் 7,200 பட் (இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரம் ரூபாய்) மதிப்புடைய சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தாய்லாந்து அரசு பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். 

கடந்த டிசம்பர் மாதத்தில், கடல் உணவுச் சந்தையில் பணியாற்றும் மியான்மர் தொழிலாளர்களிடையே கொரோனா தொற்று பெருமளவில் பரவிய நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நகர்வை கட்டுப்படுத்தும் விதமாக இப்படியொரு அறிவிப்பை தாய்லாந்து அரசு விடுத்திருக்கிறது. 

“சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அரசின் நடவடிக்கைக்கு அஞ்சி வெவ்வேறு இடங்களுக்கு செல்வதன் மூலம் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது,” என தாய்லாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து அரசின் இந்த அறிவிப்பு மூலம், சுமார் 6 லட்சம் முதல் 8 லட்சம் குடியேறிகள் பணி அனுமதியைப் பெற விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்களாவார்கள் என புலம்பெயர்ந்தோர் பணிக்குழு கணக்கிட்டுள்ளது.