தாய்லாந்து தடுப்பு முகாமில் இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள்: குடியேறிகளா? அகதிகளா?

சனி சனவரி 11, 2020

மலேசியா எல்லையை ஒட்டியுள்ள தாய்லாந்தின் தடுப்பு முகாமிலிருந்து தப்பியதாக சொல்லப்படும் 19 ரோஹிங்கியாக்களில் ஒருவர் சிக்கிய நிலையில், 18 பேரை தாய்லாந்து காவல்துறை தேடி வருகிறது. 

Songkhla எனும் தாய்லாந்து மாகாணத்தில் உள்ள Sadao என்னும் மாவட்டத்தின் மலேசிய எல்லையை ஒட்டிய பகுதிகளில் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரோஹிங்கியாக்களை மியான்மரிலிருந்து தாய்லாந்து வழியாக கடத்தி மலேசியாவுக்கு கொண்டு செல்லும் மனித கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதில் தப்பிய ரோஹிங்கியாக்கள், அப்படியான கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் ரோஹிங்கியா மக்கள், வெளிநாடுகளில் ஒரு புறம் சட்டவிரோத குடியேறிகளாகவும் இன்னொரு புறம் அகதிகளாகவும் அடையாளப்படுத்தப்படும் நிலை இருந்து வருகின்றது. அதே சமயம், தடுப்பு முகாமிலிருந்து தப்பிய இந்த ரோஹிங்கியாக்களை சட்டவிரோத குடியேறிகளாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது தாய்லாந்து காவல்துறை.