தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்!

வியாழன் ஜூன் 04, 2020

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் நிந்தித்ததை நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

தமிழீழ தேசத்தின் முதலாவது இராசதந்திரியாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் அரசியல் ஆலோசகராகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவாசிரியராகவும் இருபத்தேழு ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்தவர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

 

அப்படிப்பட்ட ஒரு மாவீரர் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்று நோர்வேயில் இயங்கும் தமிழ்நெற் இணையத்தின் ஆசிரியரான ஜெயச்சந்திரன் கோபிநாத் என்பவர் 18.05.2009 இற்குப் பின்னர் கூறிவந்தார்.

 

Jeya

 

குறித்த பரமார்த்த குருவின் சீடரும், நந்திக்கடல் கோட்பாட்டின் பிதாமகன் என்று தன்னைக் கூறிக் கொள்பவருமான பரணி கிருஸ்ணரஜனி என்ற நபர், தேசத்தின் குரலைத் துரோகி என்று விளித்து வெளியிட்ட கருத்துக்கள் ஒலிவடிவில் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த நிலையில் அவற்றைக் கடந்த வாரம் சங்கதி-24 வெளிக்கொணர்ந்திருந்தது.

 

Parani

 

இந்நிலையில் தனது கடமைகளைத் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் சரிவரப் புரியவில்லை என்று அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்தித் தனது முகநூல் பக்கத்தில் பரணி கிருஸ்ணரஜனி என்பவர் எழுதி, பாலா அண்ணை மீதும், அதன் மூலம் அவருக்குத் தேசத்தின் குரல் விருது வழங்கி மதிப்பளித்த தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் வசைபாடியுள்ளார்.

 

அதிலும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைக்கு இசைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கும், சிறீலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலான ஒஸ்லோ அறிக்கை கிழித்தெறியப்பட வேண்டியது என்ற தொனியிலும், அதற்கு முதல் ஒஸ்லோவில் நடைபெற்ற உதவி வழங்கும் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சார்ட் ஆமிற்ரேஜின் ஆணவப் பேச்சிற்குத் தேசத்தின் குரல் பாலா அண்ணை தகுந்த பதிலை வழங்காது தனது ஆளுமையில் இருந்து தவறியதாகவும் பரணி கிருஸ்ணரஜனி என்ற குறித்த நபர் முகநூலில் எழுதியுள்ளார்.

Parani1

 

Parani2

 

சமாதான பேச்சுவார்த்தைகளின்; பொழுதும் சரி, அதற்குப் பின்னரும் சரி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வெறுமனவே ஒரு வழிப்போக்கனாக இருந்தவர் பரணி கிருஸ்ணரஜனி என்ற முகவரியற்ற நபர்.

 

அவரது பரமார்த்த குருவாகத் திகழும் ஜெயச்சந்திரன் கோபிநாத் என்பவராவது தமிழ்நெற்றின் ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார்.

 

ஆயினும் அவரது பாத்திரமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு வழிப்போக்கனுக்கான பாத்திரம் தான். ஏனென்றால் தமிழ்நெற்றின் ஆசிரியர்களில் ஒருவராக ஜெயச்சந்திரன் கோபிநாத் விளங்கினாரே தவிர, அதில் வந்த செய்திகளில் பெரும்பாலானவற்றை எழுதியவர்கள் வேறு ஆட்கள் தான்: இன்றும் எழுதுவது வேறு ஆட்கள் தான்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வெறும் வழிப்போக்கர்களாக விளங்கிய இவர்களும் இருவரும், ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரையாம் என்ற கதையாக நந்திக்கடல் கோட்பாடு என்ற பெயரில் மாவீரர்களையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் இப்பொழுது நிந்தித்து வருகின்றனர்.

 

2003ஆம் ஆண்டு மார்கழி மாதத் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்கான ஒஸ்லோ இணக்கப்பாட்டைத் தமிழீழத் தேசியத் தலைவர் நிராகரித்தார் என்று புதுக்கதை அளக்கும் ஜெயச்சந்திரன் கோபிநாத் மற்றும் பரணி கிருஸ்ணரஜனி போன்ற வழிப்போக்கர்கள், சுவிசின் சமஸ்டி முறையை ஆராய்ந்து பார்ப்பதற்காக ஒஸ்லோ இணக்கப்பாட்டின் பின்னர் தேசத்தின் குரல் பாலா அண்ணை, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சுவிற்சர்லாந்து சென்றதையும், அதன் பின்னர் சமஸ்டித் தீர்வை ஆராய்வதற்கு என்று அரசியல் குழு ஒன்றைத் தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியதையும் மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை.

 

இதில் மிகவும் வேடிக்கையான விடயம் யாதெனில், நோர்வே, சுவீடன், பின்லாண்ட், டென்மார்க் ஆகிய நாடுகளில் சமஸ்டி முறையை ஆராய்ந்து பார்ப்பதற்காக என்று இவ் அரசியல் குழு கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டதாக 30.03.2003 அன்று தமிழ்நெற் இணையம் (தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமாக இயங்கிய பொழுது) செய்தி வெளியிட்டிருந்தது. அத்தோடு சுவிஸின் சமஸ்டி முறையை ஆராய்ந்து பார்ப்பதற்கு என்று தேசத்தின் குரல் பாலா அண்ணை, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சுவிற்சர்லாந்து சென்ற செய்தியை 11.12.2002 அன்று அதே தமிழ்நெற் இணையம் செய்தியாக வெளியிட்டிருந்தது (அது பற்றித் தமிழ்கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த செய்தியையும் இணைக்கிறோம்).

 

Tamilnet1

 

Tamilnet2

 

Tami Guardian1

 

ஒருவேளை அக் காலப்பகுதியில் இச் செய்தியை வேறு ஆட்கள் எழுதியதால் அது தமிழ்நெற்றின் இன்றைய ஆசிரியராக விளங்கும் ஜெயச்சந்திரன் கோபிநாத் அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

 

எனவே ஒஸ்லோ இணக்கப்பாடு பற்றியும், அக்காலப்பகுதியில் எவ்வாறான நிலைப்பாட்டைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எடுத்திருந்தார் என்பதையும் நிரூபிப்பதற்காக அக்காலப் பகுதியில் வெளிவந்த தமிழ் கார்டியன் பத்திரிகையின் முக்கிய பகுதிகளை இங்கு வெளியிடுகின்றோம்.

TamilGuardian2

Tamil Guardian3

 

Tamil Guardian4

 

Tamil Guardian5அத்தோடு ஒஸ்லோ உதவி வழங்கும் மாநாட்டில் அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சரின் ஆணவப் பேச்சிற்கு இராசரீக மொழியில் எவ்வாறான பதிலைத் தான் வழங்கினேன் என்று போரும் சமாதானமும் என்ற நூலில் தேசத்தின் குரல் பாலா அண்ணை எழுதிய பகுதியையும், அவரது உரையின் தமிழ்மொழிபெயர்ப்பையும் இங்கு தருகின்றோம்.

 

‘திரு.ஆமிட்ரேச் தொடர்ந்து பேசும்போது 'வன்முறையையும் பிரிவினையையும்' கைவிட வேண்டுமென விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கோரிக்கை விடுத்தார். ''அமைதி வழியில் இன நெருக்கடிக்கு தீர்வு காண இணக்கம் தெரிவித்து, விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் ரீதியில் உறுதி பூண்டிருப்பது அமெரிக்காவுக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்த உறுதிப்பாட்டுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்னும் ஒரு படி மேல் சென்று, பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிடுவதாக ஒரு பகிரங்கப் பிரகடனத்தை செய்யுமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாம் வேண்டிக் கொள்கிறோம். ஒரு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக சிறீலங்கா மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் விடுதலைப் புலிகள் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும்.'' என்றார் திரு.ஆமிட்ரேச்.

 

இன நெருக்கடிக்குள் சிக்குண்டு நிற்கும் இரு தரப்பினரையும் சமாதான வழிமுறையைத் தழுவுமாறு ஊக்குவிப்பதற்கு கூட்டப்பட்ட ஒரு சர்வதேச அரங்கில், தமிழரின் சுதந்திரப் போராட்டத்திற்கு இகழ்ச்சியை உண்டுபண்ணும் நோக்கத்துடன், ஒரு உயர்தர அமெரிக்க அரச அதிகாரி ஆத்திரமூட்டும் வகையில் எமது இயக்கத்தைச் சீண்டியது எனக்கு சினத்தைக் கொடுத்தது.

 

ஆயுதப் போராட்டம் பற்றிய அமெரிக்காவின் பார்வை மிகவும் குறுகியது, மேலோட்டமானது என்பது எனக்கு நன்கு தெரியும். அரசியல் வன்முறை பற்றி ஒரு தெளிவற்ற, குழறுபடியான கோட்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்க வல்லரசு, உலகெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை வடிவமான போராட்டங்கள் எல்லாவற்றையுமே பயங்கரவாதப் பூதமாகக் காண்கிறது. அடக்குமுறைக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக நிகழ்த்தப்படும் சில போராட்டங்களின் தார்மீக அடிப்படை, அரசியற் புறநிலை, வரலாற்று சூழ்நிலை ஆகிய முக்கிய அம்சங்கள் இந்த குறுகிய பார்வைக்குள் அடங்குவதில்லை. எனினும், இந்த சர்வதேச அரங்கில் ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட நான் விரும்பவில்லை. எனது உரையின் போது, பண்பான மொழியில், நாகரீகமான முறையில், எமது மக்களின் போராட்ட தர்மத்தை சுருக்கமாக எடுத்துக் கூறி அவருக்கு பதிலளிப்பதென முடிவு எடுத்தேன்.

 

தேனிர் விருந்துபசாரத்தின் பின்னர், ஜப்பான் அரச பிரதிநிதி திரு.யசூசி அகாஸி, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி திரு.பீட்டர் ஹன்சன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் சிறீமதி. மார்கொட் வால்ஸ்ரோம், சர்வதேச அபிவிருத்திக்கான பிரித்தானிய ராஜாங்க மந்திரி திருமதி.கிளையர் சோட், ஆகியோர் உரைநிகழ்த்தினர். எல்லோருமே சமாதான முயற்சிக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்தனர். இதனையடுத்து நான் உரையாற்றினேன். எனது உரையின் முக்கிய பகுதிகளை மட்டுமே இங்கு தருகிறேன்:

 

‘‘இலங்கைத் தீவின் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சார்பாக இம் முக்கிய மாநாட்டில் உரைநிகழ்த்த நான் அழைக்கப்பட்டமை எனக்குக் கிடைத்த கௌரவமாகவே நான் கருதுகிறேன். இந்த மாநாட்டைக் கூட்டியமைக்காக, நோர்வே அரசாங்கத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவசர மனிதாபிமானத் தேவைகளை உதவி வழங்கும் உலக நாடுகளுக்கு எடுத்து விளக்க, இன நெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட இரு சாரருக்கும் இந்த மாநாடு ஒரு சிறந்த அரங்கமாக அமைந்துள்ளது.

 

தென் ஆசியாவில் சமாதானமும், அரசியல் உறுதி நிலையும், வளமான வாழ்வும் நிலவ வேண்டுமென அக்கறை கொண்டுள்ள நாடுகளைப் பிரதிநிதப்படுத்தும் நீங்கள், இலங்கையின் வடகிழக்கு மாநிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் அங்கு தற்போது நிலவும் யதார்த்த மெய்நிலை பற்றியும் அறிந்த கொள்ள ஆவலாக இருப்பீர்கள்.

 

இரண்டு தசாப்தங்களாக இலங்கைத் தீவைப் பாழ்படுத்திய இன யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும், களத்தில் ஒரு நிலையான சமாதானச் சூழ்நிலை நிலைநாட்டப்பட்டதுமே இந்த அமைதி முயற்சியால் பெறப்பட்ட மகத்தான சாதனையாகும். போர் நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதன் காரணமாக, நெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே வன்முறையை நிறுத்திக் கொண்டனர். துப்பாக்கிகள் இப்போது மௌனமாகியுள்ளன. போர் நிறுத்த உடன்பாடானது சர்வதேச கண்காணிப்பு முறைமையினால் மேற்பார்வை செய்யப்படுவதால் பெரிய அளவிலான யுத்த மீறல்கள் எதுவுமின்றி ஒன்பது மாதங்களுக்கு மேலாக நிலைத்து நீடிக்கிறது. மிகவும் இறுக்கமான இராணுவ ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட நெருக்கடி நிலையைப் படிப்படியாகத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிகவும் கொடூரமான யுத்தத்திற்கு முகம் கொடுத்த வடகிழக்கு மாநிலத்தில் இப்பொழுதுதான மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வரத் தொடங்கியுள்ளது.

 

சமாதானத்தைப் பலப்படுத்தி, இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் தெளிவான தரிசனத்துடன் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில், தாம் எதிர்கொள்ளும் அவசர வாழ்நிலைத் தேவைகளுக்கு கால தாமதமின்றி உடனடியாக பரிகாரம் கிட்டுமென போரினால் அவல வாழ்வைத் தழுவி நிற்கும் எமது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. காலம் கடத்தாது உடனடியாக, பணமாவும் பொருளாகவும் துயருற்று நிற்கும் எமது மக்களுக்கு உருப்படியான உதவிகள் கிடைக்காது போனால் இந்த சமாதான முயற்சியிலும் பேச்சுக்களிலும் அவர்கள் எவ்வித அர்த்தத்தையும் கண்டு கொள்ளப் போதில்லை. தமிழர் தாயகத்தை சீரழித்துச் சிதைத்துவிட்ட இந்தக் கோரமான கொடும் யுத்தம் பெரும் இடர்பாடுகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் உருவாக்கியது. எமது மக்களின் இந்த துன்ப துயரங்களுக்குப் பரிகாரம் காணாது அவர்களது மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்யாது போனால் சமாதான முயற்சியில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பாரதூரமாகப் பாதிக்கப்படும்.

 

பயங்கரமான யுத்தத்தின் விளைவாக எமது மக்களுக்கு ஏற்பட்ட பெரும் கேடுகளையும் பேரழிவுகளையும் இங்கு மிகவும் சுருக்கமாக எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். பல வருடங்களாக வன்னி யுத்த பூமியில் வாழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அங்கு வாழும் மக்களின் வாழ் நிலை யதார்த்தத்தை சித்தரித்துக் காட்ட என்னால் முடியும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ச்சியாக இடைவெளியின்றி நிகழ்ந்த கோரமான போருக்கு முகம் கொடுத்த யுத்த களமாக இலங்கைத் தீவின் வடகிழக்குப் பிரதேசம் குறிப்பாக வடமாகாணம் விளங்குகிறது. சனநாயக ஆட்சிமுறையில் பங்குபற்ற அனுமதியாது அரசியல் வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஓரம் கட்டி ஒதுக்கப்பட்டதுடன், அரச அடக்குமுறைகளுக்கு ஆளாகியதன் விளைவாகவே இன நெருக்கடி தோற்றம் கொண்டது. வளங்களும் வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டு எமது மக்களுக்கு இனரீதியாகப் பாரபட்சம் காட்டப்பட்டது. அடக்குமுறையும் அரச வன்முறையும் தாங்க முடியாதவாறு தீவிரமடைந்த கட்டத்திலேயே தமிழ் மக்கள் ஆயுதம் தரித்த எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

 

தமிழரின் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு இயக்கத்தை பூண்டோடு அழித்து தமிழர் தாயகத்தை அடிமை கொள்ள உறுதி பூண்ட முன்னைய சிங்கள அரசுகள், பாரிய அளவில் சுடுகல சக்தியைப் பிரயோகித்து, தொடர்ச்சியாக முடிவில்லாமல் பெரும் எடுப்பில் படை நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் மிகவும் கோரமானவை. எமது மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க புராதன நகரங்கள், பட்டினங்கள், கிராமங்கள் எல்லாமே தரை மட்டமாக்கப்பட்டன. போரினால் பேரழிவுக்கு ஆளாகிய தமிழரின் சொத்துக்களை அளவிட முடியாது. தமிழ்ப் பகுதிகளிலுள்ள கட்டுமாணங்கள் எவ்விதம் இடிந்து சிதைத்து கிடக்கின்றன என்பதையும் இப் பேரழிவின் விசாலமான பரிமாணத்தையும் ஏ-9 நெடுஞ்சாலை வழியாக வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் நேரில் கண்டிருக்கலாம். இடிந்து, கருகிச் சிதைந்த கோலத்தில் காட்சி தரும் இந்தப் பேய் நகரங்களைப் பார்க்கும் போது இரண்டாம் உலக யுத்தத்தின் கோரமான அழிவுச் காட்சிகள் சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்த யுத்தத்தினால் பெருந்தொகையில் அப்பாவிக் குடிமக்கள் மாண்டு போயினர். அறுபதினாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொண்டது இந்தக் கொடும் போர். நில ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட இந்தப் போரினால் தமது சொந்த மண்ணிலிருந்து, தமது பாரம்பரிய கிராமங்களிலிருந்து பத்து லட்சம் மக்கள் வரை இடம்பெயர நேர்ந்தது. பல ஆயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இராணுவ அட்டூழியங்கள் தலை விரித்தாடின. பல நூற்றுக்கணக்கானோர் மாயமாக மறைந்து போயினர்.

 

இப்பொழுது ஆயுதப் போர் முடிவுக்கு வந்துள்ள போதும், போரினால் விளைந்த அவல நிலை தொடர்கிறது. வடகிழக்கில் வாழும் மக்கள் தாங்கொணாத் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இடம்பெயர்ந்தோர் அகதி முகாம்களில் அவலப்படுகிறார்கள். சொந்த இடங்களுக்குத் திரும்பிய சிலரும் கூரையற்ற இடிந்த வீடுகளிலிருந்து நிவாரண உதவியின்றி இன்னல் அனுபவிக்கின்றனர். தமிழர் தாயகத்தின் சமூக, பொருளாதாரக் கட்டுமாணங்கள் முற்றாக அழிக்கப்பட்டதால் எங்கும் வறுமையும் வேலையில்லாதத் திண்டாட்டமும் தலை விரித்தாடுகிறது. எமது வளமான, செழிப்பான நிலங்கள் கண்ணிவெடி வயல்களாக மாற்றப்பட்டுள்ளன. வடக்கில், மக்கள் குடியிருப்புக்களைச் சூழ இருபது லட்சம் நிலக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேராபத்தின் மத்தியிலேயே எமது மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்;. யுத்;தத்தின் விளைவுகள் ஒருபுறமும், முந்திய அரசினால் திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இன்னொரு புறமுமாக, தமிழர் தேசத்தின் பொருளாதாரத்திற்கு ஆதாரமான வேளாண்மையும் மீன்பிடித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்ததில் இந்த யுத்தமானது தமிழரின் தேசிய பொருளாதாரத்தை சீரழித்து முடங்கச் செய்துள்ளது. அத்துடன் தமிழரின் சீவயத்தையும் சிதைத்துவிட்டது. எனவே, இந்தப் போருக்கு உண்மையில் பலிக் கடாக்கள் ஆனவர்கள் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களே. அவர்கள்தான் உடனடி நிவாரணத்திற்கு அருகதைபெற்றவர்கள்.

 

சிக்கலான இனப் பிரச்சினையைத் தீர்க்கும் கடினமான பேச்சுக்களை நாம் தொடரும் அதே சமயம், போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் புனர்வாழ்வுக்கும் புனர்நிர்மாணத்திற்கும் கணிசமான அளவில் நிதியுதவி வழங்க வேண்டுமென சர்வதேச அரசாங்கங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். சமாதானத்தின் பெறுபேறுகளாக கால தாமதமின்றி இந்த உதவி எமது மக்களைச் சென்றடைய வேண்டும். அப்படிச் செய்தாலேயே இந்த சமாதான முயற்சியில் எமது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கக் கூடிய நல்லெண்ண சூழ்நிலையும் உருவாகும்.

 

சமாதானத்திலும் அமைதி வழியிலான தீர்விலும் எமது இயக்கம் உறுதிபூண்டு நிற்கிறது என்பதை சர்வதேச சமூகத்திற்கு நாம் திட்டவட்;டமாக கூற விரும்புகிறோம். போர் நிறுத்த உடன்பாட்டில் உறுதிமொழி அளித்தது போன்று நாம் யுத்தத்திலோ வன்முறையிலோ ஈடுபடப் போவதில்லை. சிறீலங்காவின் ஆயுதப் படைகளும் அதே உறுதிப்பாட்டுடன் அமைதி பேணுமென நாம் நம்புகிறோம். யுத்தத்தின் அழிவு சக்தி பற்றி இரு தரப்பினர் மத்தியிலும் நல்ல தெளிவு ஏற்பட்டுள்ளது. எமது மக்கள் அரச அடக்குமுறைக்கு ஆளாக்கப்படாது இருந்தால், எமது மக்களின் ஆவலுக்கும் அபிலாசைகளுக்கும் மதிப்பு அளிக்கப்பட்டால், அவர்களது அரசியல் பிரச்சினை அமைதி வழியில் தீர்க்கப்பட்டால், மீளவும் நாம் வன்முறைப் போராட்டத்தில் குதிப்பதற்கு அவசியமில்லை. இன நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை, நிரந்தர சமாதானம் ஏற்படும் வரை, எம்மால் முடிந்த அளவு ஆயுத மோதல்களைத் தவிர்த்து, அமைதி வழியைத் தழுவுவோம் என உறுதி கூற விரும்புகிறோம்.’’’