தேசக் கனவை இதயத்தில் சுமந்தவளின் இறுதி யாத்திரை!

வெள்ளி பெப்ரவரி 07, 2020

தன் வலியைத் தாங்கிக் கொண்டு 
வேங்கைகளின் நினைவோடு
தாயக வலிதுடைக்கும் பயணத்தில்
தன்னை இணைத்த தங்கை திக்சி
எங்களோடு இனியில்லை.

என்றும் சிரித்த முகம், கலகலப்பான கதை.
நட்புக்கு இலக்கணம்.
கொண்ட கொள்கையில் உறுதி.
இலட்சியப் பயணத்தில் சமரசமற்ற போக்கு.
நீதிக்கான தேடலில் ஓர்மம்.

தலைமைத்துவ ஆளுமை.
முகாமைத்துவ வல்லமை.
தமிழ்த்தேசத்தின் மீது அளவற்ற பற்று.

7

மழலைகள் தொடங்கி
முதியோர் உள்ளம்வரை ஆழப்பதிந்த அன்பு.
செல்லப்பிராணிகளே விட்டுப் பிரிய மறுக்கும் உறவு.
இப்படி இன்னும் எத்தனையோ அடையாளங்களுக்கு சொந்தக்காரி திக்சி.

தேகம் இழைத்த போதும்
காலன் அழைத்த போதும்
பேசும் புலன் இழக்கும் வரை
தேசக் கனவை இதயத்தில் சுமந்தவளின் இறுதி யாத்திரை நாளை.

வரிகளாலும் வர்ணனைகளாலும்
வரையறைக்குட்படுத்த முடியாதவளின்
வாழ்வு மட்டும் வரையறுக்கப்பட்டுவிட்ட சோகம்.

எதிர்பார்க்கப்பட்ட செய்தி என்றாலும்
ஏற்றுக் கொள்ள கடினமான சேதி.
தனது வாழ்வு இடையில் முடிந்துவிடுமென்று
முன்கூட்டியே உணர்ந்ததாலோ
இவள் பேச்சிலும் செயலிலும் பெரும் வேகம் உருவானது?

ஏங்கிவாழும் எம் தேச அம்மாக்கள் நெஞ்சில் நிறைந்தவளே
நீ தாங்கி வளர்த்த தமிழ் இளையோர் அமைப்பு
உன் தடத்தை தொடரும்.

இறப்பிற்குப் பின்னும்
தாயகத்தையும் புலத்தையும் மீண்டுமொருமுறை
நீ இணைத்திருக்கிறாய்.
ஆதலால், மரணத்திற்குப் பின்னும்
வாழும் மானுடம் நீயென நம்புகிறோம்.

தாயக விடுதலையென்னும்
உன்னத இலட்சியத்திற்காய்
ஓயாத அலையாய் திகழ்ந்தவளே!
இவ்வுலகை விட்டு உன்னுடல் பிரிந்தாலும்
ஆண்டாண்டு காலமானலும்
அர்த்தம் பொதிந்தவளாய்
ஆத்மார்த்தமாய் எம் இலட்சிய பயணத்தில்
நீ நிறைந்திருப்ப்பாய்.

ச.பா.நிர்மானுசன்