தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்களின் இணையவழி ஆவணக் காப்பகம் அங்குரார்ப்பணம்!

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்களின் இணையவழி ஆவணக் காப்பகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
பாலா அண்ணையின் ஆக்கங்களின் ஒரேயொரு உரித்துனரும், காப்புரிமையாளருமான அவரது துணைவியார் கலாநிதி அடேல் பாலசிங்கம் அவர்களின் முழு அனுமதியுடன் www.antonbalasingham.com என்ற இணையத்தளத்தில் அவரது நூல்கள், கைநூல்கள், நூல் முன்னுரைகள், கட்டுரைகள், உரைகள், செவ்விகள் போன்ற அவரது ஆக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு பாலா அண்ணையின் பதினான்காம் ஆண்டு நினைவு நாளாகிய 14.12.2020 திங்கட்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 6 மணிக்கு சூம் (Zoom) இணையச் செயலி ஊடாக இடம்பெற்றது.
பாலா அண்ணையோடு பணிபுரிந்த அரசறிவியலாளர் கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இவ் அங்குரார்ப்பண நிகழ்வில், பாலா அண்ணையின் வழிநடத்தலில் தமிழ் கார்டியன் (Tamil Guardian) பத்திரிகையில் பணிபுரிந்தவரும் அரசறிவியலாளருமான கலாநிதி மதுரிகா இராசரட்ணம், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பாலா அண்ணையின் உதவியாளராகக் கலந்து கொண்டவரும், அவரது இறுதிக் கணங்களில் அவரின் அருகில் நின்றவருமான அன்ரன் பொன்ராஜா, தமிழ் கார்டியன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், அமெரிக்காவில் இயங்கும் பேர்ள் (PERL) அமைப்பின் மூத்த ஆலோசகருமான மாரியோ அருள்தாஸ், ஈழமுரசு பத்திரிகையின் பொறுப்பாசிரியரும், மூத்த செயற்பாட்டாளருமான கி.ஜெய்சந்தர், களச்செய்தியாளராக விளங்கியவரும், ஊடகவியலாளருமான இளமாறன் நாகராசா, அண்மையில் சர்வதேச அரசியலில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவரும், மாவீரர் லெப்.கேணல் செல்வகுமார் அவர்களின் புதல்வியுமான சரித்திரா செல்வகுமார் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.
இதன்பொழுது ஈழமுரசு பத்திரிகையின் பொறுப்பாசிரியர் கி.ஜெய்சந்தர் கருத்துரைக்கையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் மிகப்பெரும் பணியின் தொடக்க செயற்பாட்டை அன்ரன் பாலசிங்கம் ஆவணக் காப்பகம் ஆரம்பித்திருப்பதை வரவேற்றார்.
அத்தோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பணியில் இருந்து நாம் தவறி விடக் கூடாது என்றும் கி.ஜெய்சந்தர் அவர்கள் வலியுறுத்தினார்.
இந் நிகழ்வின் நிறைவில் கருத்து வெளியிட்ட கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா, திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு முன் தமிழீழ சுதந்திர சாசனம் என்ற ஆவணத்தைத் தயாரித்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களான தமிழ்த் தேசியம், தாயகம், தன்னாட்சிரியுமை ஆகிய கோட்பாடுகளுக்கு திண்ணியமான தத்துவார்த்த வடிவம் கொடுத்த பாலா அண்ணையைத் தவிர்த்துத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எழுத முடியாது என்று குறிப்பிட்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணையும் முன் பாலா அண்ணை எழுதிய ஆக்கங்களும் விரைவில் www.antonbalasingham.com இணையத்தில் இணைக்கப்படும் என்று உறுதியளித்தார்.