தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் எழுதிய ‘விடுதலை’ நூல் - இலவசமாகப் படிக்கலாம்!

வெள்ளி சனவரி 08, 2021

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘விடுதலை’ என்ற தலைப்பிலான நூல் www.antonbalasingham.com ஆவணக் காப்பகத்தால் இலவசமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சியில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் வகித்த காத்திரமான பங்கு, தமிழீழத் தேசியத் தலைவருடன் ராஜீவ் காந்தி செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு வரலாற்றுக் கட்டுரைகளையும், அரசறிவியல், வரலாற்றியல், பொருளியல், மானுடவியல் என பல துறைகளை ஊடுருவிச் செல்லும் ஒன்பது தத்துவக் கட்டுரைகளையும் உள்ளடக்கித் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் ‘விடுதலை’ என்ற நூல் 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

இதன் படிகள், 2006ஆம் ஆண்டு வன்னியில் வெளியிடப்பட்டன.

 

இதன் பின்னர் இந்நூல் சட்டபூர்வமாகவோ அன்றி அதிகாரபூர்வமான முறையிலோ மீள்வெளியீடு செய்யப்படவில்லை.

 

இந் நிலையில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் (தமிழ் வடிவம்) உட்பட அவரது ஆக்கங்களைத் தேசிய முகமூடி அணிந்த தனிநபர்கள் சிலர் திருடி 2009 மே 18இற்குப் பின்னர் அதனை இந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் விற்பனை செய்து வருமானம் ஈட்டுவதோடு, அவரது ஆக்கங்களில் தன்னிச்சையாக மாற்றங்களையும், இடைச் செருகல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

 

இந் நிலையில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்கள் அவர் எழுதிய அதே வடிவத்திலும், இலவசமாகவும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு அவற்றை www.antonbalasingham.com ஆவணக் காப்பகம் இலவசமாக வெளியிடுவதற்கு அவரது ஆக்கங்களின் சட்டபூர்வ காப்புரிமையாளரும், உரித்துனருமான அவரது துணைவியார் கலாநிதி அடேல் பாலசிங்கம் அனுமதி வழங்கியுள்ளார்.

 

பாலா அண்ணையின் செவ்விகள், அவர் எழுதிய கட்டுரைகளை, நூல் முன்னுரைகள், கைநூல்கள் போன்றவற்றோடு சோசலிசத் தமிழீழத்தை நோக்கி, போரும் சமாதானமும் (ஆங்கில வடிவம்) ஆகிய நூல்கள் www.antonbalasingham.com ஆவணக் காப்பகத்தால் 14.12.2020 அன்று வெளியிடப்பட்டன.

 

இந்நிலையில் தற்பொழுது அவர் எழுதிய ‘விடுதலை’ நூல் அனைவரும் இலவசமாகவும், இலகுவாகவும் வாசிக்கும் வகையில் www.antonbalasingham.com ஆவணக் காப்பகத்தில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

 

அத்தோடு அவர் எழுதிய போரும் சமாதானமும் நூலின் தமிழ் வடிவம் தற்பொழுது www.antonbalasingham.com ஆவணக் காப்பகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் இம் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் போரும் சமாதானமும் நூலின் தமிழ் வடிவம் www.antonbalasingham.com ஆவணக் காப்பகத்தில் முழுமையாக பதிவேற்றப்படும் என அதன் ஆசிரியர் குழு சங்கதி-24 இணையத்திற்கு அறியத் தந்துள்ளது.