டெல்லி குடியரசு தின விழாவில் 15 - வயதுகுட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை!

செவ்வாய் சனவரி 19, 2021

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றன. அண்மையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் தான் கொண்டாடப்பட்டது. 

இந்தியாவைப் பொருத்தவரை நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினத்தை கொண்டாட மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணத்தால் கடந்த ஆண்டுகளில் இருந்து சற்று வித்தியாசமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான தகவல்களை அறிந்த மூத்த அதிகாரி ஒருவர் என்.டி.டி.வி-யிடம் பேசும்போது, குடியரசு தின நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,15,000-லிருந்து 25,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நிகழச்சியை காண அனுமதிக்கப்படமாட்டார்கள். கலாச்சாரம் சார்ந்து நடைபெறும் நிகழ்ச்சியின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

அணிவகுப்பு நடைபெறும் பாதையின் தூரமும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதையானது விஜய் சவுக் பகுதியில் இருந்து தொடங்கி நேஷனல் ஸ்டேடியம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது அணி வகுப்பின் தூரமானது 8.2 கி.மீ லிருந்து 3.3 கி.மி வரை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கு இடையிலான தனிமனித இடைவெளியை அதிகரிக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய விதிமுறைகளின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்துப் பார்வையாளர்களும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதோடு, நிகழ்ச்சி முழுவதும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அறிகுறிகள் இருப்பவர்களை தனிமைப்படுத்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் எட்டு வார்டுகள் அமைக்கப்பட்டிள்ளன என்றும் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவரும் உதவியாளரும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய நபர்கள் அமரும் இடங்களிலும் அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளிலும் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குடியரசு தின விமான அணிவகுப்பில் இந்த ஆண்டு முதன்முறையாக ரபேல் போர் விமானங்கள் இடம் பெறப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.