டெல்லி மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை!

புதன் ஏப்ரல் 10, 2019

திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திபெத் புத்தமத தலைவரான தலாய் லாமா(வயது 83), டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் பங்கேற்றார். ஏப்ரல் 6-ம் தேதி மாநாடு முடிவடைந்தது. அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை தரம்சாலா சென்றார். அங்கு சென்றதும் உடல்நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து, நேற்று மீண்டும் டெல்லி திரும்பினார். 

டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தலாய் லாமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கிருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தரம்சாலா நகரில் வசித்து வருகிறார்.