டெல்லி போராட்டத்தில் விவசாயி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது- ஒருவர் உயிரிழப்பு!

புதன் சனவரி 27, 2021

டெல்லியில் நடந்த உழவு இயந்திர பேரணியில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி எல்லையில் காவல்துறையினரின் தடைகளை உடைத்து, விவசாயிகள் உழவு இயந்திர பேரணியை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் திடீரென உழவு இயந்திரத்துடன் டெல்லிக்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினர் எச்சரிக்கையையும் மீறியும் உள்ளே நுழைந்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. டெல்லி காவல்துறையினர் தடியடியும் நடத்தினர். பல இடங்களில் கண்ணீர் புகை குண்டும் வீசினர். தொடர்ந்து முன்னேறிய விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.

அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர். அங்கு விவசாயிகளின் கொடியையும் ஏற்றினர். விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், உழவு இயந்திரத்தை ஓட்டிய விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளதார். அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் போராடிவரும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது