டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவன்

செவ்வாய் மே 26, 2020

பெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்டியுள்ளது.

ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த உள்நாடு விமான போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமான போக்குவரத்தையும் பயன்படுத்தியவண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விஹன் சர்மா என்ற 5 வயது சிறுவன் பெங்களூரில் உள்ள தனது தாயை சந்திக்க முடியாமல் டெல்லியில் சிக்கிக்கொண்டான். தனது மகனை சுமார் 3 மூன்று மாதங்கள் பார்க்க முடியாமல் சர்மாவின் தாயார் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து, டெல்லியில் இருந்து சர்மாவை பெங்களூரு அழைத்து வர அவனது தாயார் உரிய ஏற்பாடுகளை செய்தார். இதற்காக டெல்லியில் இருந்து பெங்களுரூ வரும் விமானத்தில் சிறப்பு வகுப்பில் டிக்கெட் பதிவு செய்தார்.

 

தாயுடன் விஹன் சர்மா

 

இதையடுத்து, உறவினர்கள் உதவியுடன் சர்மா டெல்லி விமான நிலையம் வந்தடைந்தான். அங்கிருந்து விமான பயணத்தை தொடங்கிய சர்மா தனி ஆளாக பெற்றோர், உறவினர்கள் என யாரின் துணையும் இல்லாமல் பெங்களூரு வந்தடைந்தான். விமானத்தில் சிறுவன் சர்மா சிறப்பு வகுப்பு பயணி பிரிவில் பயணம் மேற்கொண்டான்.

டெல்லியில் இருந்து தனி ஆளாக பெங்களூரு வந்திறங்கிய தனது மகன் சர்மாவை கண்டதும் விமான நிலையத்தில் காத்திருந்த சிறுவனின் தாய் அவனை ஆரத்தழுவி தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

டெல்லியில் இருந்து பெங்களூரு வரை விமானம் மூலம் பெற்றோர், உறவினர்கள் உதவி இல்லாமல் தனி ஆளாக பயணித்து வந்த 5 வயது சிறுவன் சர்மாவின் தைரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.