டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்!

வியாழன் அக்டோபர் 03, 2019

தலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ செய்து வருகிறது.

காஷ்மீரில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் முன்பு போல பயங்கரவாதிகளால் செயல்பட முடியவில்லை. இதனால் இதுவரை பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

ஆனாலும், தாக்குதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பயங்கரவாதிகளின் திட்டம். அனைத்து மாநிலங்களுமே உஷார்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் மற்ற இடங்களில் ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அதையும் மீறி தலைநகரம் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் டெல்லியில் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருப்பதாக மத்திய உளவு படைகள் தகவல் சேகரித்துள்ளன.

இதையடுத்து டெல்லி போலீசுக்கு மத்திய உளவுப்படை எச்சரிக்கை அனுப்பி உள்ளது. ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், மால்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.

தற்போது நடந்து வரும் நவராத்திரி விழாவையொட்டி அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று உளவுத்துறை கூறியுள்ளது.
 

இதையடுத்து போலீஸ் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள 15 மாவட்டங்களில் துணை போலீஸ் கமி‌ஷனர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கமாண்டோ படையினர்.

 

அப்போது 15 மாவட்டங்களிலும், கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு தங்க வருபவர்களை முழுமையாக விசாரித்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி நகரில் புதிதாக குடியிருப்பவர்கள், ‘பேயிங் கெஸ்டாக’ தங்கி இருப்பவர்கள் அனைவருடைய விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களிலும் புதிதாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் வாகனங்களில் வெடிகுண்டை வைத்து தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனவே அனாதையாக நிற்கும் வாகனங்கள் அனைத்தையும் சோதனையிட்டு வருகிறார்கள். முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சந்தேகப்படும் நபர்களை உடனடியாக அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

டெல்லி நகரம் முழுவதும் போலீசின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே இந்திய விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக இன்னொரு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பதன்கோட், அமிர்தசரஸ், ஸ்ரீநகர், அவந்திப்பூர், ஜம்மு, ஹிண்டன் ஆகிய விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.