டெல்லியில் பயங்கர தீ விபத்து - 32 பேர் பலி!

ஞாயிறு டிசம்பர் 08, 2019

டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜான்சி ராணி சாலையில் அமைந்துள்ள தனாஜ் மண்டியில் இன்று அதிகாலை தீ பற்றியது. தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தகவலறிந்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினர் சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.