டெல்டா மாவட்டங்களில் கடுமையான மழை! 10ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நாசம் -

புதன் சனவரி 13, 2021

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கடுமையான மழை காரணமாக, லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

டெல்டா மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குடவாசல், நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரிலான பயிர்களை மழைநீர் மூழ்கியுள்ளது. 

இதில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடியில் கண்மாயிகளில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி அறுவடை செய்யப்படவிருந்த 10 ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இதேபோல, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.