தெலுங்கானாவில் 5 வங்கதேச குடியேறிகள் கைது!

சனி மே 18, 2019

தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 வங்கதேச குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்காளம் வழியாக  கடவுச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக நுழைந்து தெலுங்கானாவில் வேலை செய்து வந்துள்ளனர். 

இவர்களிடமிருந்து ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட  இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சங்கரெட்டி மாவட்டத்தில் ருத்ரராம் என்ற கிராமத்தில் உள்ள இறைச்சி கூடமொன்றில் வேலை செய்து வந்திருக்கின்றனர். இவர்களில் சிலர் உள்ளூர் பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இது தொடர்பாக ஊடகங்களிடம் விளக்கியுள்ள காவல்துறை ஆய்வாளர் நரேஷ், “சலீம் மற்றும் இஸ்லாம் என்ற இரு வங்கதேசிகள் சட்டவிரோதமாக வங்கதேசம்- இந்திய எல்லைப்பகுதியை கடக்க பலருக்கு உதவியிருக்கின்றனர். அப்படி வந்த பலருக்கு  வேலையும் வாங்கி கொடுத்திருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார். சமீபத்தில் வங்கதேசம் சென்ற அவர்களை பிடிக்க உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

மேலும், சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசிகளை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.